நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து 26 சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கியது கே.பி.சர்மா ஒலி அரசு
காத்மாண்டு: நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து 26 சமூக வலைதளங்கள் மீதான தடையை கே.பி.சர்மா ஒலி அரசு நீக்கியது. நேபாள நாட்டில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாள நாட்டில் உள்ள சமூக ஊடகங்களான பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவைகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இத்தகைய இணையதளங்கள் நேபாள நாட்டு சட்டப்படி பதிவு செய்ய ஒருவாரம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் உரிய நிபந்தனைகள்படி பதிவு செய்யப்படாத பேஸ்புக், யூடியூப் உள்பட 26 சமூக ஊடகங்கள் செப்.4ஆம் தேதி முதல் நேபாள நாட்டில் தடை செய்யப்பட்டன.
இந்த இணையதளங்கள் நேபாள சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்படும் வரை தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. நேபாள ஜென் இசட் தலைமுறைைய சேர்ந்த இளைஞர்கள் நேற்று நாடு முழுவதும் இணையதள தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறி போகவே போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி மாளிகை, துணை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம், போராட்டம், கூட்டங்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
உள்துறை அமைச்சப் பமேஷ் லேகக் தன்னது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.