Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாளத்தில் இடைக்கால ஆட்சி அமைப்பது யார்? ராணுவ தலைமை அலுவலகத்தில் ஆலோசனை

காத்மாண்டு: சர்மா ஒலி பதவி விலகியதை தொடர்ந்து நேபாளத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ராணுவ தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. நேபாளத்தில் இணையதள தடை மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக ஜென் இசட் என்ற இளம் தலைமுறை போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். இதுவரை வன்முறைக்கு 30 பேர் பலியாகி விட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது நேபாளத்தில் ராணுவம் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளது. வீதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மெதுவாக அமைதி திரும்பி உள்ளது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜென் இசட் குழுவின் பிரதிநிதிகளை இடைக்கால அரசு அமைக்க ராணுவம் அழைத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று சென்றுள்ள’ ஜென் இசட்’ குழுவின் பிரதிநிதிகளுடன் நேபாள ஜனாதிபதி ராமச்சந்திர பவ்டேல் மற்றும் ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் ஆகியோர் நேற்று பத்ரகாளியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் இடைக்கால அரசாங்கத்தை நடத்துவதற்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா,நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி குல்மான் கிசிங் மற்றும் சம்பாங்கின் மேயர் தரன் ஹர்கா ஆகியோரது பெயர்கள் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த பரிசீலிக்கப்படுவதாக ஜென் இசட் குழுவினர் தெரிவித்தனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், அவர் எந்த பெயர்களையும் வழங்கவில்லை.

அவர் கூறுகையில்,’நாங்கள் வெவ்வேறு குழுவினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். தற்போதைய முட்டுக்கட்டையிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதிலும், அதே நேரத்தில் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமையைப் பராமரிப்பதிலும் பேச்சுவார்த்தைகள் முக்கியமாக கவனம் செலுத்துகின்றன’ என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். ராணுவ தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது முடிவைக் கேட்க ராணுவத் தலைமையகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த கூட்டத்தின் முடிவில் தேர்வு செய்யப்படும் புதிய இடைக்கால தலைவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நேபாளத்தில் தேர்தல் நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* தடை உத்தரவுகள் நீக்கம்

நேபாளத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் காத்மாண்டு பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்களில் மட்டும் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் அத்தியாவசியப் பணிகளைச் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

* இந்திய எல்லையில் 60 கைதிகள் சிக்கினர்

நேபாள சிறைகளில் இருந்து தப்பி இந்திய எல்லைக்கு வந்த சுமார் 60 கைதிகளை இந்திய எல்லைக்காவல்படையான சாஸ்திர சீமாபால் படையினர் கைது செய்துள்ளனர். உபி, பீகார், மேற்குவங்க எல்கைகளில் அவர்கள் சிக்கி உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று தெரிய வந்துள்ளது.

யார், யார்?

1. முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி

2. காத்மாண்டு மேயர் பாலன் ஷா

3. நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் குல்மான் கிசிங்

4. சம்பாங்கின் மேயர் தரன் ஹர்கா

* சிறையில் மோதல் 3 கைதிகள் பலி 15 ஆயிரம் பேர் தப்பினர்

நேபாள சிறையில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் குறைந்தது 3 கைதிகள் இறந்தனர். 15,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பினர். நேற்று காலை மாதேஷ் மாகாணத்தில் உள்ள ராமேச்சாப் மாவட்ட சிறையில் கைதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் 3 கைதிகள் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர். கைதிகள் கேஸ் சிலிண்டரை வெடிக்கச்செய்து சிறையிலிருந்து வெளியேற முயன்றபோது மோதல் தொடங்கியது. இதே போல் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்கள் மூலம் 15,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் உறுதிப்படுத்தின. காஸ்கி மாவட்ட சிறைச்சாலையில் 773 பேர் தப்பியோடியதாக சிறை அதிகாரி ராஜேந்திர சர்மா தெரிவித்தார். தப்பியோடியவர்களில் 13 இந்தியர்கள் மற்றும் 4 வெளிநாட்டினர் அடங்குவர்.

* இழுபறி ஏன்

நேபாளத்தில் புதிய இடைக்கால அரசு அமைப்பதில் இரண்டு நாளாக நடக்கும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பது ஏன் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஜென் இசட் குழுவினர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அரசியலமைப்பைத் திருத்த வேண்டும் என்று கூறியதுதான் இழுபறி நீடிப்பதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஜென் இசட் குழுவின் பிரதிநிதிகளான திவாகர் தங்கல், அமித் பனியா மற்றும் ஜுனல் தங்கல் ஆகியோர் கூறுகையில்,’ இது முற்றிலும் ஒரு மக்கள் இயக்கம். இதை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்காதீர்கள். நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். மக்களின் மனநிலைக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். நாங்கள் அரசியலமைப்பை அகற்ற விரும்பவில்லை. ஆனால் மக்களின் கவலைகளை உள்ளடக்கிய சில முக்கிய திருத்தங்களை நாங்கள் விரும்புகிறோம்’ என்றனர்.