காத்மண்ட்: நேபாளத்தில் இடைக்கால அரசின் அமைச்சரவையில் நேற்று மூன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். நேபாளத்தின் சமூக ஊடகங்கள் மீதான தடை காரணமாக கடந்த 8ம் தேதி போராட்டம் வெடித்தது. ஜென்-இசட்பிரிவின் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. நாடு முழுவதும் வெடித்த வன்முறை சம்பவங்களில் சுமார் 72 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்துக்கு பணிந்து கடந்த வாரம் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
போராட்டக்குழுவின் பரிந்துரைக்கேற்ப இடைக்கால பிரதமராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுசிலா கார்க்கி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்த 12ம் தேதி சுசீலா கார்க்கி நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் இடைக்கார அரசின் அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குல்மான் கிசிங், ரமேஷ்வர் கானல் மற்றும் ஓம் பிரகாஷ் ஆர்யல் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. மஹர்ஜ்கஞ்சில் ஷீத்தல் நிவாஸில் உள்ள அதிபர் அலுவலகத்தில் நடந்த விழாவில் அதிபர் ராமச்சந்திர பவ்டெல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.