Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: நாடாளுமன்றத்துக்கு 6 மாதத்தில் தேர்தல்

காத்மாண்டு: ஊழல் மற்றும் சமூக ஊடக தளங்கள் மீதான தடைக்கு எதிராக நேபாளம் முழுவதும் வெடித்த வன்முறையின் தொடர்ச்சியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. சுசிலா கார்க்கி புதிய இடைக்கால பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் சமூக ஊடகத்தடை ஆகியவற்றை கண்டித்து ெஜன் இசட் எனப்படும் மாணவர், இளைஞர்கள் பங்கேற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.

போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நாடாளுமன்றம் தீ வைக்கப்பட்டது.  இதையடுத்து பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். ராணுவம் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் போராட்டம் ஓய்ந்துள்ளது. புதிய இடைக்கால பிரதமர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஜென் இசட் குழுவுக்கும், ராணுவத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.

ஜனாதிபதி ராமச்சந்திர பவுடல் மற்றும் நேபாள ராணுவத் தலைவர் மற்றும் ஜென் இசட் குழுவினர் இதில் பங்கேற்றனர். அப்போது புதிய இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி, காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி குல்மான் கிசிங் மற்றும் தரண் ஹர்கா சம்பாங்கின் மேயர் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இருப்பினும், தற்காலிக பிரதமர் பதவிக்கு கார்க்கியின் பெயர் அனைத்து தரப்பினராலும் தற்காலிகமாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

இருப்பினும் நாடாளுமன்றத்தை கலைப்பதா, வேண்டாமா என்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி ராமச்சந்திர பவுடலுக்கும், ஜென் இசட் பிரதிநிதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தை கலைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி பவுடல் எடுத்தார். நாடாளுமன்றத்தை கலைத்தால் மேலும் அரசியலமைப்பு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், 2015 இல் வெளியிடப்பட்ட நேபாள அரசியலமைப்பை தொடர்ச்சியாக பின்பற்ற அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் ெஜன் இசட் குழுவினர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை வெளியிடுவதில் உறுதியாக இருந்தனர். இதை ஏற்க மறுத்த ஜனாதிபதி பவுடலும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் பிரச்னை உருவானது. இறுதியில் ஜென் இசட் குழுவின் கோரிக்கைகளை ஜனாதிபதி பவுடல் ஏற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைக்கவும், இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கியை நியமிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி நேற்று இரவு 9மணிக்கு பதவியேற்றார். அவருடன் ஜென் இசட் குழுவை சேர்ந்தவர்கள் இடைக்கால அமைச்சராக பதவி ஏற்றனர். இதனால் நேபாளத்தில் நிலவி வந்த அரசியலமைப்பு முட்டுக்கட்டை தீர்ந்தது. பின்னர் நேபாள நாடாளுமன்றத்துக்கு 6 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று இடைக்கால பிரதமர் சுசிலா கார்க்கி அறிவித்தார்.

* இந்திய பயணிகள் சென்ற பஸ் மீது தாக்குதல்

நேபாளத்தில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் காத்மாண்டு அருகே இந்தியர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து தாக்கப்பட்டுள்ளது. காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த இந்திய சுற்றுலா பேருந்து மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது, இதனால் பல பயணிகள் காயமடைந்ததாக பேருந்து ஓட்டுநர் கூறியுள்ளார். இந்த சம்பவம் செப்.9 அன்று நடந்துள்ளது.

இந்திய-நேபாள எல்லையில் உள்ள சோனாலி அருகே போராட்டக்காரர்கள் 49 இந்தியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறிவைத்து நடத்தியதாக கூறப்படுகிறது. கற்கள் வீசப்பட்டதாகவும், ஜன்னல்கள் உடைந்ததாகவும், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பயணிகள் காயமடைந்ததும் தெரிய வந்துள்ளது. காயமடைந்தவர்களை உள்ளூர் அதிகாரிகள் காத்மாண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், மீதமுள்ள பயணிகள் நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்திய பெண் உள்பட 51 பேர் பலி

நேபாளத்தில் வெடித்த வன்முறைக்கு ஒரு இந்தியர் உள்பட 51 பேர் பலியாகி உள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து நேபாள காவல்துறையின் இணை செய்தித் தொடர்பாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் தாபா கூறுகையில்,’ நேபாள வன்முறையில் உயிரிழந்தவர்களில் ஒரு இந்திய பெண், மூன்று போலீசார் உள்பட 51 பேர் பலியாகி உள்ளனர். மகாராஜ்கஞ்சில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக போதனா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது.

அங்கு 36 உடல்கள் உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 17 உடல்கள் மீட்கப்பட்டது. நேற்று பிற்பகல் பாக்மதை ஆற்றின் கரைக்கு அருகிலுள்ள பசுபதிநாத் கோயிலின் ஆர்யகாட்டில் பல உடல்கள் தகனம் செய்யப்பட்டன. போராட்டங்களின் போது கிட்டத்தட்ட 1,700 பேர் காயமடைந்தனர். அவர்களில் சுமார் 1,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேபாள காவல்துறை படிப்படியாக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கி வருகிறது, சேதப்படுத்தப்பட்ட அல்லது தீக்கிரையாக்கப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் புறக்காவல் நிலையங்கள் மெதுவாக மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன’ என்று தெரிவித்தார்.

நேபாள வன்முறையில் பலியான இந்திய பெண் பெயர் ராஜேஷ்தேவி கோலா என்பது தெரிய வந்தள்ளது. நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோயிலுக்கு கணவர் ராம்வீர் சிங் சயானியுடன் சென்றுள்ளார். செப்.9 அன்று வன்முறை ஏற்பட்ட போது காத்மாண்டுவில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் தீ வைக்கப்பட்டது. அதில் இருந்து தப்பிக்க 4வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக இறங்கிய போது அவர் பலியானது தெரிய வந்தது. நேபாளத்தில் இருந்து அவரது உடல் உபி கொண்டு வரப்பட்டுள்ளது.

* யார் இந்த சுசிலா கார்க்கி?

* 1952 ஜூன் 7 அன்று இந்திய எல்லைக்கு அருகில் உள்ள கிழக்கு நேபாளத்தின் பிரத்நகரில் உள்ள சங்கர்பூர்-3ல் சுசிலா கார்க்கி பிறந்தார்.

* 1971ல் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் மகேந்திர மோராங் வளாகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், 1975ல் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார்.

* 1978 இல் சட்டப் பட்டம் பெறுவதற்காக அவர் திரிபுவன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.

* நீதித்துறைத் துறையில் 32 ஆண்டுகள் கார்க்கி செலவிட்டார்

* 1979ல் பிரத்நகரில் தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார்

* 1985 ஆம் ஆண்டு தரனில் உள்ள மகேந்திரா மல்டிபிள் கேம்பஸில் உதவி ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

* 2007 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞரான இவர், 2009 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

* 2010 நவம்பர் 18 அன்று நிரந்தர நீதிபதியானார்.

* 2016 ஜூலையில் நேபாளத்தின் 24வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

* ஓட்டல் துறை வீழ்ச்சி

நேபாளம் சுற்றுலா சார்ந்த நாடு. அங்கு நடந்த வன்முறையில் பல ஓட்டல்கள் எரிக்கப்பட்டன. காத்மாண்டு பள்ளத்தாக்கு, போகாரா, புட்வால், பைரஹாவா, ஜாபா, பிரத்நகர், தங்கதி, மஹோட்டாரி மற்றும் டாங்-துளசிபூர் ஆகிய இடங்களில் உள்ள முன்னணி ஓட்டல்கள் எரிக்கப்பட்டன. இதனால் 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். மேலும் பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

* மணமகனுக்கு அனுமதி

உபி மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் கைர்னிஹா கிராமத்தில் வசிக்கும் சலாவுதீனின் திருமண ஊர்வலம், நேபாளத்தின் பாங்கே மாவட்டத்தில் உள்ள பலேகான் கிராமத்திற்குச் செல்லவிருந்தது. ஆனால் எல்லையில் எஸ்.எஸ்.பி. படையால் தடுத்து நிறுத்தப்பட்டது. மிகவும் வற்புறுத்தலுக்குப் பிறகு, மணமகனும் 10 உறவினர்களும் ருபைதிஹா எல்லை வழியாகச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இதே போல் அயோத்தியை சேர்ந்த ரேஷூ கானுக்கும் நேபாளம் பாங்கே மாவட்டத்தில் திருமணம் நடை பெற இருந்தது. மணமகளும் அவரது நெருங்கிய உறவினர்களும் உபி மாநிலம் ருபைதிஹா எல்லைக்கு வந்தனர், அங்கு ஒரு மவுல்வி முன்னிலையில் திருணம் செய்யப்பட்டது.

* முதல் பெண் தலைமை நீதிபதி முதல் முதல் பெண் பிரதமர் வரை...

இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற சுசிலா கார்க்கி, நேபாள அரசியலில் ஒரு சாதனை படைப்பார் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை. நேபாள உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான 73 வயதான சுசிலா கார்க்கி, நேற்று இரவு நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார்.

2016 ஜூலையில் நேபாளத்தின் 24வது தலைமை நீதிபதியாக சுசிலா கார்க்கி நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை வகித்த முதல் மற்றும் ஒரே பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். அவர் சுமார் 11 மாதங்கள் அந்தப் பதவியில் இருந்தார். ஊழலுக்கு எதிராக இருந்ததால் அப்போதைய பிரதமர் ஷெர்பகதூர் டியூபா அரசால் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டார். தற்போது நேபாளத்தின் முதல் இடைக்கால பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

* தமிழ்நாடு பக்தர்கள் நேபாளம் பயணம்

காஞ்சிபுரத்தில் இருந்து 23 பேர் கொண்ட குழு உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ருபைதிஹா வழியாக இந்தியா-நேபாள எல்லையைக் கடந்து திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்குப் புறப்பட்டனர். அவர்களை சாஸ்திர சீமா பால் படையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் நேபாள நிர்வாகத்துடன் பேசி, அந்நாட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

* வெளிநாட்டினருக்கான விசா விதிகள் தளர்வு

நேபாளத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினர் நலன் கருதி விசா விதிகளை அதிகாரிகள் தளர்த்தி உள்ளனர். செப்டம்பர் 8 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் விசாக்களைக் கொண்ட சர்வதேச பயணிகள் இப்போது கூடுதல் கட்டணம் செலுத்தாமல் வெளியேறும் அனுமதிகளைப் பெறலாம். மேலும் அவர்களின் விசாக்களை முறைப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.