Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாளத்தில் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்ற ராணுவம் : போராட்டத்தை கைவிட தலைமை தளபதி கோரிக்கை

காத்மாண்டு: நேபாளத்தில் நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை பராமரிக்க ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதித்ததால் நாடு முழுவதும் பெரும் கலவரம் ஏற்பட்டது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில், அரசுக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடித்தது. இதையடுத்து, இளைஞர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், சமூக ஊடக செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நேபாள அரசு நீக்கியது.

மேலும், இளைஞர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சரும், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் அமைச்சரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர்.இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், காத்மண்டுவில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

நாடாளுமன்றக் கட்டடம், அமைச்சரவைக் கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், பிரதமரின் தனிப்பட்ட இல்லம், அமைச்சர்களின் இல்லங்கள், காவல் நிலையம், சாலையில் நின்ற வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் நிலைமை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மீறியது.

இந்த நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக சர்மா ஓலி அறிவித்துள்ளார். தொடர்ந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்த சர்மா ஓலி, அமைச்சர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும் கலவரம் நீடித்து வருவதால் நேபாளத்தில் பாதுகாப்புக்கான பொறுப்பை அந்நாட்டு ராணுவம் ஏற்றுள்ளது. இதற்கிடையே நேபாள ராணுவ தளபதி மக்களிடையே உரையாற்றினார்.அதில்,

பேச்சுவார்த்தைக்கு நேபாள ராணுவ தளபதி அழைப்பு

போராட்டத்தை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி நேபாள ராணுவ தளபதி அழைப்பு விடுத்துள்ளார். கலவரத்தால் நாட்டின் பொது சொத்து சேதப்படுத்தப்படுவது கவலையளிக்கிறது என நேபாள ராணுவ தளபதி வேதனை தெரிவித்தார். நாட்டின் அமைதி, பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் திரும்ப வேண்டும். வன்முறை, கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

நேபாளத்தில் 700 இந்தியர்கள் தவிப்பு

பதற்றம் அதிகரித்துள்ள நேபாளத்தில் இந்தியர்கள் 700 பேர் காத்மாண்டு விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

நேபாளம்; இந்தியர்களுக்கு அவசர எண் அறிவிப்பு

நேபாளத்தில் பதற்றம் நிலவி வருவதால் இந்தியர்களுக்கு உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977-9808602881,9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம். காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்தது.