Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாள கலவரத்தில் பல உயிர்களைக் காப்பாற்றி ஹிரோவான செந்தில் தொண்டமான்: ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் பாராட்டு!!

சென்னை: அண்மையில் நேபாளத்தில் நடந்த மக்கள் புரட்சி போராட்டங்களின் போது, ​​இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் உயிர் தப்பியதோடு மேலும் பலரையும் காப்பாற்றியுள்ளார். செந்தில் தொண்டமான் தொழிற்சங்க மாநாட்டிற்கு சென்றிருந்த வேளையில் அவர் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின் போது ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் செந்தில் தொண்டமான் ஈடுபட்டுள்ளார். அவரின் செயற்பாடு காரணமாக பலரின் உயிர் காப்பாற்றப்பட்டது. செந்தில் தொண்டமானின் செயல்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, உயிர் தப்பிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் செந்தில் தொண்டமானுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

சமீபத்தில் அண்டை நாடான நேபாளத்தில் அந்த நாட்டு அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் வெகுண்டெழுந்து நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைக் கலவரத்தில், நேபாளத்தில் நடைபெற்ற தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் திரு. செந்தில் தொண்டைமான் அவர்கள் தான் தங்கியிருந்த விடுதி தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், தன் உயிரை துச்சமென மதித்து அங்கு தங்கியிருந்த பல சுற்றுலாப் பயணியரை காப்பாற்றியுள்ளார் என்ற மனித நேயச் செய்தியை அறிந்து மிக்க மகிழ்ச்சியுற்றேன்.

‘பிறர் நலமே தன் நலம்’ என்பதன் அடிப்படையில், தம்மால் முடிந்த வரை போராடி சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றிய திரு. செந்தில் தொண்டைமான் அவர்களின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது. பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக செந்தில் தொண்டைமான் அவர்களின் பணி அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; நேபாள கலவரத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பாதுகாத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு செந்தில் தொண்டைமான் அவர்களின் மனிதநேயமிக்க செயல்பாடு மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

நேபாள அரசுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குக் கலவரமாக உருவெடுத்த நிலையில், தங்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அப்பாவி பொது மக்களை தன் உயிரைப் பணயம் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு செந்தில் தொண்டைமான் அவர்கள் காப்பாற்றியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

வன்முறை வெறியாட்டத்தால் ராணுவக் கட்டுப்பாட்டையும் இழந்த நேபாளத்தில் வசிக்கும் மக்களும் நம்மில் ஒருவரே என்ற எண்ணத்தில் பொதுநலத்துடன் செயல்பட்ட திரு செந்தில் தொண்டைமான் அவர்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாம் தமிழர் கட்சியில் சீமானும், தமிழக பாஜக அண்ணாமலையும் செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.