Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நேபாள போராட்டத்தால் முன்னெச்சரிக்கை; டெல்லி போலீஸ் படைக்கு அதிரடி உத்தரவு: அவசர கால செயல் திட்டம் தயாரிப்பு

புதுடெல்லி: நேபாளத்தில் நடந்த இளைஞர் போராட்டங்களைத் தொடர்ந்து, டெல்லியிலும் அதுபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க போலீசார் அவசர கால செயல் திட்டத்தைத் தயாரித்து வருகின்றனர். நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம், ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் சமூக வலைதளத் தடைக்கு எதிராக ‘ஜென் ஸி’ தலைமுறை இளைஞர்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தினர். அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம் வன்முறையாக மாறி, அரசு கட்டிடங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் சூறையாடப்பட்டன.

இதன் விளைவாக, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்ய நேரிட்டதுடன், முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. நேபாளத்தில் நடந்த இந்த ‘தலைவர்கள் இல்லாத, இளைஞர்களால் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்கள்’ இந்தியாவிற்கும் பரவக்கூடும் என டெல்லி காவல்துறைக்கு அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா, இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள ‘அவசர கால செயல் திட்டத்தை’ தயாரிக்குமாறு அனைத்துப் பிரிவுகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி, நேபாளப் போராட்டத்திற்கு ‘டிஸ்கார்ட்’ போன்ற சமூக வலைதளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து ஆய்வு செய்யவும், வதந்திகளைத் தடுக்கவும், உளவுத் தகவல்களை முன்கூட்டியே சேகரிக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் உத்திகளை வகுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட காவல் பிரிவுகள், சைபர் செல்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் போன்ற ஆயுதங்களின் இருப்பை தணிக்கை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைநகரில் இன்று 2 போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று ஒரே நாளில் இருவேறு முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்கள் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடக செய்திகள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்களின் நலனுக்கான தேசிய கவுன்சில் சார்பில் நண்பகல் 12 மணிக்கு தொடங்கும் இந்தப் போராட்டத்தில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தை பாலின சமத்துவத்துடன் மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்படுகிறது. அதேபோன்று, பாலஸ்தீனத்துடன் இந்திய மக்கள் மற்றும் முற்போக்கு கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நண்பகல் 12 மணிக்கு போராட்டம் தொடங்கும் என சமூக வலைதளம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில், அடுத்தடுத்த நேரத்தில் முற்றிலும் மாறுபட்ட கோரிக்கைகளுடன் இரண்டு பெரிய போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது டெல்லி வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.