நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தை பயன்படுத்தி தப்பிய 13,000 சிறைக்கைதிகள்: மீண்டும் சரண் அடைந்த ஒரே ஒரு கைதி!
காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால தலைவர் நியமனம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கிளர்ச்சியை பயன்படுத்தி நாட்டின் 77 மாவட்டங்களில் இருந்து 13,000 சிறை கைதிகள் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்கள் மீதான தடை காரணமாக நேபாளத்தில் கடந்த 8ம் தேதி GEN Z தலைமுறையினர் தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதில் இதுவரை 34 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே பிரபல ரேப் பாடகரும், காத்மாண்டுவின் மேயருமான 35 வயது இளைஞர் பாலேந்திர ஷாவை இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்று போராட்ட குழுவினர் வலியுறுத்தினர். பின்னர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான சுசீலா கார்கியின் பெயர் அரசு தலைமை பதவிக்கு முன்வைக்கப்பட்டது. நேபாள அரசியல் அமைப்பு சட்டப்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் அதிபர், பிரதமர் போன்ற அரசியல் தலைமை பதவியை வகிக்க முடியாது என்பதால், வேறு பெயர்களை பரிந்துரைக்கும்படி ராணுவ தளபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இளைஞர் குழுவில் ஒரு தரப்பினர் சுசீலாவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், மற்றொரு தரப்பினர் மேயர் பாலேந்திர ஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் அமைப்பு சட்டம் அனுமதிக்காவிட்டாலும் சுசீலா கார்கியே தற்போது தேவை என்று மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர். நாட்டின் மின்சார நெருக்கடியை சமாளித்த மின்சாரத்துறை பொறியாளர் குல் மான் கீசிங் என்பவரின் பெயரும் இடைக்கால தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இளைஞர்கள் போராட்டத்தை பயன்படுத்தி 77 மாவட்டங்களில் உள்ள சிறைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தங்காடி பகுதியில் உள்ள சிறையில் இருந்து 692 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், ஒரே ஒரு கைதி மட்டும் மீண்டும் வந்து சரணடைந்துள்ளார். அடுத்த ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு தண்டனைக் காலம் அதிகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சரண் அடைந்ததாக அவர் விளக்கமளித்தார்.