சென்னை: நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களுக்கு வரும் 31ம் தேதி ஏலத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக ஏற்கனவே 24,000 புகார்கள் வந்த நிலையில் புதிதாக 32,000 புகார்கள் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிறுவனத்திற்கு சொந்தமான தங்கம், வெள்ளி நகைகளை ஏலம்விட எந்த ஆட்சேபனையும் இல்லை என நியோமேக்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அசையும் சொத்துகளை பொது ஏலம் விடுவது தொடர்பாக வரும் 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு 31ம் தேதி ஏலத்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஏலம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட பின்னர், ஏலம் தொகை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, ஏல தேதி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.