நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 3 மாணவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலையில் அபிஷேகப்பட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இங்கு, வரலாற்றுத் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர், நேற்று முன்தினம் தனது பைக்கை அனுமதிக்கப்படாத பகுதியான கேன்டீன் அருகே ஓட்டிச் சென்றதாகவும், அதே துறையைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரான மற்றொருவர், இது குறித்து தட்டிக் கேட்டபோது மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் ஒருங்கிணைந்த வரலாறு பட்ட மேற்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வரும் வண்ணார்பேட்டை அருகே உள்ள மணிமூர்த்திஸ்வரத்தை சேர்ந்த மாணவர் லட்சுமி நாராயணன் (18) தாக்கப்பட்டார்.
இதுகுறித்து பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், லட்சுமி நாராயணனை அவமரியாதையாக பேசி அழைத்ததாகவும், அவர் வர மறுத்ததால், 10க்கும் மேற்பட்டோர் பேராசிரியர்கள் முன்பே அவரைச் சூழ்ந்து கடுமையாகத் தாக்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில், லட்சுமி நாராயணன் பலத்த காயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதலில் எதிர்தரப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் காயம்பட்டதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் அடிப்படையில் பேட்டை போலீசார் கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகள் மற்றும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சேரன்மகாதேவியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் மதார் பக்கீர் (20), இரண்டாம் ஆண்டு மாணவர் அருள்முத்து செல்வம் (20), மூன்றாம் ஆண்டு மாணவர் சுந்தர் என்ற ஜான் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மாணவர்கள் மோதலைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால், மறு அறிவிப்பு வரும் வரை காலவரையற்ற விடுமுறை அளிப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. விடுதிகளில் தங்கியிருந்த மாணவ, மாணவிகளும் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டதால், வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.