மதுரை : நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. நெல்லை கேடிசி நகர் பகுதியில் கடந்த 27ம் தேதி காதல் விவகாரத்தில் கவின் என்ற பட்டியலின இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தம்பி சுர்ஜித், அவரது தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதி நாதன் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், " கவின் ஆணவ படுகொலை வழக்கை நெல்லை மாவட்ட நீதிபதி கண்காணிப்பின் கீழ் சிபிசிஐடி. விசாரிக்க வேண்டும், கவினின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும், ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை இயற்ற உத்தரவிட வேண்டும்," என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதிகள், " நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை முறையாக நடைபெறுவதால், மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை. சிபிசிஐடியின் விசாரணை குறித்து எந்த புகாரும் இல்லை என்பதால், மனுதாரர் தன்னிடம் உள்ள விபரங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கலாம். தவறு செய்தவர்கள் தப்பிக்க கூடாது. ஆகவே சிபிசிஐடி., விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை 8 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும், "இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை 2 மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.