நெல்லை: நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் போலி பதிவெண்ணுடன் வாகனத்தைப் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினர் 19 ஆவணங்களை சேகரித்துள்ளனர்.
நெல்லையில் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளர், அவரது மகன் மற்றும் உறவினர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆய்வாளர், அவரது மகன் சுர்ஜித் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
அந்த விசாரணையில் சிபிசிஐடிக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் 19 ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக தனது மகனுக்கு இருசக்கர வாகனத்தை உதவி ஆய்வாளர் வாங்கி கொடுத்துள்ளார். அந்த வாகனம் போலி பதிவெண்ணொடு இயக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவத்திற்கு பிறகு மகனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை தீயிட்டு கொளுத்துவதற்காக உறவினரின் குவாரிக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கையில் உதவி ஆய்வாளர் ஈடுபட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் பல்வேறு தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மூவருக்கும் ஜாமீன் வழங்கக்கோரி ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் போலி பதிவெண்ணுடன் வாகனத்தைப் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.