நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை மாதம் பாளை கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கவின் காதலித்த சித்தா டாக்டர் சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தையான எஸ்ஐ சரவணன் மற்றும் அவரது உறவினர் ஜெயபால் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். கவின் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை 70 சாட்சிகளை விசாரணை மேற்ெகாண்டுள்ளனர். இதில் கொலை வழக்கு தொடர்பான 19 ஆவணங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கில் 8 வாரத்தில் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழ்நாடு தடய அறிவியல் ஆய்வகத்தின் பகுப்பாய்வு முடிவுகள் வரவேண்டிய நிலையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் ஒருமாத கால அவகாசம் கேட்டு சிபிசிஐடி போலீசார் கடந்த 7ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து மதுரை ஐகோர்ட் ஒரு மாதம் அவகாசம் அளித்தது. இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நெல்லை மாவட்ட தீண்டாமை வன் ெகாடுமை தடுப்பு சிறப்பு (நெல்லை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு) நீதிமன்றத்தில் ஏற்கனவே பல்வேறு தகவல்களை தெரிவித்தும் சில ஆவணங்களையும் சமர்ப்பித்த நிலையில் முறையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக சென்னை சென்று உயரதிகாரிகளின் ஆலோசனையை பெற்று தற்போது கவின்செல்வகணேஷ் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தயார்படுத்தி விட்டனர். இதனால் ஓரிரு நாட்களில் நெல்லை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
