நெல்லை: நெல்லையில் நேற்று பெய்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பறந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று (வியாழன்) மாலையில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.
மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாநகரின் பிரதான பகுதியான வண்ணார்பேட்டையில் பல சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. நேற்றைய மழை காரணமாக நெல்லை மாநகரில் இன்று காலை முதலே ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பறந்தன. நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருவனந்தபுரம் சாலை, வண்ணார்பேட்டை பைபாஸ் சாலைகளில் வாகன ஓட்டிகளின் கண்களை மறைக்கும் அளவிற்கு ஈசல்கள் பெருக்கெடுத்து பறந்தன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
அதிகாலையில் எழுந்து நடை பயிற்சி மேற்கொள்வோரும், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் ஈசல்களை கைகளால் விரட்டிக் கொண்டே நடந்து சென்றனர். வாகன ஓட்டிகள் தலையில் ஹெல்மெட் இல்லாமல் பயணிக்க முடியாத அளவுக்கு ஈசல்கள் மொய்த்தன. காலை 8 மணிக்கு சூரிய வெளிச்சம் காரணமாக ஈசல்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. அதன் பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.