தொடர்ந்து ஒருவர் வெற்றி பெற்ற வரலாறு இல்லை என்பதால் நெல்லையில் இருந்து தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன்; நாங்குநேரியில் களம் காண திட்டம்: எங்கு நின்றாலும் தோற்கடிக்க திமுக முடிவு
சென்னை: திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் தொடர்ந்து ஒருவர் வெற்றி பெற்ற வரலாறு இல்லை என்பதால், வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி மாற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார். பக்கத்து தொகுதியான நாங்குநேரியில் களம் காண திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் நயினார் நாகேந்திரன் எங்கு போட்டியிட்டாலும் பலமான வேட்பாளரை நிறுத்தி அவரை தோற்கடிக்க திமுக முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சட்டப்பேரவை தேர்தலுக்காக பணிகளில் ஆளுங்கட்சியான திமுக முழு வீச்சில் இறங்கியுள்ளது. கடந்த முறை திமுக அணியில் இடம் பெற்ற அதே கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ மட்டுமே இதுவரை இடம் பெற்றுள்ளன. வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் எந்த கட்சி கூட்டணிக்கு வரும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள பாஜவுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜ வெற்றி பெற்றது. அதாவது, திருநெல்வேலி தொகுதியில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை தெற்கு தொகுதியில் பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் டாக்டர் சி.சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அதே போல வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை விட அதிக தொகுதிகளை கேட்க பாஜ முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 3 பேர் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டும் தொகுதி மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது திருநெல்வேலி தொகுதியில் இருந்து பக்கத்தில் உள்ள தொகுதிக்கு அவர் மாற உள்ளார். திருநெல்வேலி தொகுதியை பொறுத்தவரை பிள்ளைமார், மறவர், தேவேந்திர குலவேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் உள்ளனர். இதில் பிள்ளைமார் சமூகத்தினர் எப்போதும் பாஜவினருக்கு ஆதரவாக வாக்களிப்பது உண்டு. அதே நேரத்தில் பிற சமூகத்தினரின் வாக்கும் ஒரளவுக்கு பாஜவுக்கு விழ வாய்ப்புள்ளது. இருந்த போதிலும் திருநெல்வேலி தொகுதியை பொறுத்தவரை ஒரு தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏ அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றதாக இது வரை சரித்திரம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு தான் திருநெல்வேலி சட்டசபை தொகுதி என்பது இருந்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நயினார் நாகேந்திரன் தோல்வியை சந்தித்தார். திமுகவை சேர்ந்த என்.மலை ராஜா வெற்றி பெற்றார். தொடர்ந்து 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட லட்சுமணன் வெற்றி பெற்றார். நயினார் நாகேந்திரன் தோல்வியை சந்தித்து தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார். இப்படி தான் திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியின் களநிலவரம் என்பது இருந்து வருகிறது. அந்த அளவுக்கு அந்த தொகுதி வாக்காளர்கள் மாற்றி மாற்றி தான் எம்எல்ஏக்களை தேர்வு செய்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் ஜோதிடத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அதிக நம்பிக்கை உள்ளவர். ஜோதிடம் வழிப்படி நடப்பவர். ஜோதிடம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் நெல்லை போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம். அந்த அளவுக்கு தான் தொகுதி உள்ளது என்று கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தொகுதி மாறுவது தான் நல்லது என்று அதில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், எப்படியாவது வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் நயினார் இருந்து வருகிறார்.
அதே நேரத்தில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளார். இதனால், பக்கத்து தொகுதியான நாங்குநேரியில் நயினார் நாகேந்திரன் களம் காண முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சென்றால் வெற்றி பெற்று விடலாம் என்று அவர் இருந்து வருகிறார். தற்போது நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூபி மனோகரன் இருந்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்டால் எளிதாக நாம் வெற்றி பெற்று விடலாம் என்ற கனவிலும் நயினார் நாகேந்திரன் இருந்து வருகிறார்.
அதே நேரத்தில் மீண்டும் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்து வருகிறது. அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் மூலமாக திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்த போது, மீண்டும் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றால் மாவட்டத்தில் உள்ள அனைவரின் பதவியும் பறிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், நயினார் நாகேந்திரன் போட்டியிடும் தொகுதியில் மிக பலம் வாய்ந்த வேட்பாளரை களம் இறக்க திமுக முடிவு செய்துள்ளது. நயினார் நாகேந்திரன் நாங்குநேரியில் போட்டியிட்டால், அந்த தொகுதியை காங்கிரஸிடம் இருந்து திமுக பெறும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் திமுக வேட்பாளர் களம் இறக்கப்பட்டால், நயினாரின் வெற்றி என்பது கேள்விக்குறியாகி விடும். இதனால், தொகுதி மாறும் எண்ணத்தில் உள்ள நயினாரின் வெற்றி பெறும் எண்ணம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
* ஜோதிடத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அதிக நம்பிக்கை உள்ளவர். ஜோதிடம் வழிப்படி நடப்பவர். ஜோதிடத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் நெல்லையில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம். அந்த அளவுக்கு தான் தொகுதி உள்ளது என்று கணித்துள்ளதாக கூறப்படுகிறது


