நெல்லை: நெல்லை அருகே கார் கண்ணாடி உடைத்ததற்கு நஷ்டஈடு கேட்ட தகராறில், வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கோவில்பத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் அருண் செல்வம் (29). இவரது அண்ணன் கார்த்திக்கின் கார் கண்ணாடியை, வைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற போஸ் 10 நாட்களுக்கு முன்பு உடைத்ததாக கூறப்படுகிறது. அதற்கான நஷ்டஈட்டை கார்த்திக் கேட்டதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு கிருஷ்ணாபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாருக்கு அருண்செல்வம் தனது நண்பரான செய்துங்கநல்லூரைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் ஜலீல் என்பவருடன் சென்றுள்ளார். அங்கு இசக்கிமுத்து, அவரது கூட்டாளியுடன் மது அருந்தச் சென்றுள்ளார். அருண் செல்வத்தை பார்த்ததும், கார்த்திக் என நினைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அருண்செல்வம் நீங்கள் பார்த்தது எனது அண்ணனை எனக்கூறியதாகவும், ஆனாலும் அவர்கள் அரிவாளை எடுத்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. நிலைமை மோசமடைவதை உணர்ந்த அருண்செல்வம், ஜலீலுடன் தனது பைக்கில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், இசக்கிமுத்து அவர்களைப் பின்தொடர்ந்து விரட்டி வந்துள்ளார்.
அவரிடமிருந்து தப்பிக்க, பிரதான சாலையில் செய்துங்கநல்லூருக்குச் செல்வதற்குப் பதிலாக, அருகிலுள்ள காவல் சோதனைச் சாவடிக்குச் செல்லலாம் என அருண்செல்வம் எதிர்பாராதவிதமாக தவறான பாதையில் பைக்கை ஓட்டியுள்ளார். எதிர் திசையில் வாகனங்கள் வந்ததால் அவரால் வேகமாகச் செல்ல முடியவில்லை. அப்போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த இசக்கிமுத்துவும் அவரது கூட்டாளியும், கிருஷ்ணாபுரம், பெட்ரோல் பல்ங் அருகே அருண் செல்வத்தை முதுகிலும், மணிக்கட்டிலும் பலமாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அருண் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்க வந்த நண்பர் ஜலீலின் தலையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அருண் செல்வத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஜலீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இசக்கிமுத்து மற்றும் அவருடன் வந்த நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘‘இசக்கிமுத்து என்ற போஸ் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கார்த்திக்கிற்கும், இசக்கிமுத்துவிற்கும் இருந்த முன்விரோதத்தில் கார்த்திக்கைப்போல் இருக்கும் அவரது தம்பியிடம் இசக்கிமுத்துவும், அவரது கூட்டாளிகளும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவரை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர்’’ என்றனர்