*விபத்து ஏற்படும் அபாயம்
நெல்லை : நெல்லை சந்திப்பில் இருந்து வண்ணார்பேட்டை, பாளை பஸ்நிலையம் செல்லும் பஸ்கள் பழைய தாமிரபரணி ஆற்றுப்பாலம் வழியாகவும், இதுபோல் பாளை, வண்ணார்பேட்டையில் இருந்து நெல்லை சந்திப்பு பகுதிக்கு வரும் வாகனங்கள், பஸ்கள் புதிய ஆற்றுபாலத்தின் வழியாகவும் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்காக அண்ணா சிலையில் இருந்து வண்ணார்பேட்டை வரை சென்டர் மீடியம் அமைக்கப்பட்டு இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் எப்போதும் எதிரெதிர் அதிக வாகன போக்குவரத்து காணப்படுகிறது.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்று பாலத்தின் மேற்கு பகுதியில் சென்டர் மீடியனை அகற்றி இருசக்கர வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திப்பு பகுதியில் இருந்து வண்ணார்பேட்டை செல்லும் இருசக்கர வாகனங்களும், வண்ணார்பேட்டையில் இருந்து சந்திப்பு நோக்கி வரும் இரு சக்கர வாகனங்களும் இப்பகுதியில் திடீரென திரும்பி செல்வதால் விபத்து அபாயம் காணப்படுகிறது.
இந்நிலையில் தேவர் சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பொதுமக்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்லும் வகையில் சென்டர் மீடியத்தை இரவோடு இரவாக உடைத்து நடைபாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் சாலையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அடிக்கடி கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த குறுகிய சாலையில் பொதுமக்கள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதில் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.