சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் எதுவாக இருந்தாலும் பாஜ வெற்றி பெறுவதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது என்ற குற்றச்சாட்டை உறுதி செய்கிற வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ், தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடிகள் குறித்து மக்களிடையே தீவிர பரப்புரையை மேற்கொள்கிற வகையில் மாநில அளவில் மாநாடு நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டது.
இதன்படி, தமிழ்நாட்டில் மாநில அளவிலான மாநாடு, வருகிற செப்டம்பர் 7ம் தேதி திருநெல்வேலியில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இதில், அகில இந்திய காங்கிரஸ் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். தலைவர் ராகுல் காந்தியின், தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்துகிற முயற்சிகளுக்கு வலிமை சேர்க்கிற வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணிதிரண்டு வர வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.