நெல்லை: நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்ட போது 8 பெட்டிகளுடன் இயங்கியது. இதில் அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாகும். குறைந்த நேரத்தில் சென்னை செல்வதால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மேலும் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டன. 16 பெட்டிகளுடன் இயங்கிய நிலையிலும் வந்தே பாரத் ரயிலுக்கான காத்திருப்பு பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. எனவே வரும் 24ம் தேதி முதல் மேலும் 4 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. அன்று முதல் இந்த ரயில் மொத்தம் 20 பெட்டிகளுடன் இயங்கும். இதன் மூலம் கூடுதலாக 312 பயணிகள் பயணிக்கலாம்.
தற்போது சாதாரண இருக்கை வசதி பெட்டிகளில் 1128 பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த இருக்கை வசதி பெட்டிகளில் வரும் 24ம் தேதி முதல் 1,440 பயணிகள் பயணம் செய்ய முடியும். வரும் 24ம் தேதி முதல் இணைக்கப்படும் 20 பெட்டிகளில் 2 சிறப்பு இருக்கை வசதி பெட்டிகளும் உள்ளன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.