Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் இருந்து இன்று முதல் அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் ஓடாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூட்டறிக்கை

சென்னை: தமிழகத்தில் இருந்து இன்று முதல் அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கம் நிறுத்தப்படுவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த ஏழு நாட்களாக கர்நாடகா போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை அபராதம் வசூலித்துள்ளது. இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்டின்படி தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள். எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவிக்கிறார்கள் .

இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக, ஆபரேட்டர்கள் இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இந்நிகழ்வை தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மாநிலங்களுக்கு இடையை இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு (90 நாட்கள்) தமிழக சாலை வரி ரூ.1,50,000, ஏஐடிபி சாலை வரி ரூ90,000 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம் ஆக மொத்தம் காலாண்டுக்கு ரூ.4,50,000 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்தப் பிரச்சினையில் இன்று மாலை 5 மணி முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்பதை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.