புதுடெல்லி: நேரு, இந்திரா காந்தியை மேற்கோள் காட்டி பாஜ மூத்த தலைவர் அத்வானியை காங்கிரசின் சசிதரூர் புகழ்ந்து பேசியது சர்ச்சையாகி உள்ளது. காங்கிரஸ் எம்பியும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் சமீபகாலமாக பாஜவுடன் நெருக்கம் காட்டுவதும் பிரதமர் மோடியின் கொள்கையை புகழ்வதும் கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாஜ மூத்த தலைவர் அத்வானியின் 98வது பிறந்தநாளையொட்டி அவருக்கு சசிதரூர் நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்தார்.
எக்ஸ் தளத்தில் சசிதரூர் வெளியிட்ட பதிவில், ‘‘பொது சேவைக்கான அத்வானியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, அவரது அடக்கம், கண்ணியம், நவீன இந்தியாவின் பாதையை வடிவமைப்பதில் அவரது பங்கு அழிக்க முடியாதது. அவர் உண்மையான அரசியல்வாதி. அவரது சேவை முன்மாதிரியானவை’’ என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலளித்த வழக்கறிஞர் ஒருவர், ராம ஜென்ம பூமி இயக்கத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, ‘‘நாட்டில் வெறுப்பின் விதைகளை கட்டவிழ்த்து விடுவது பொது சேவை அல்ல’’ என்றார்.
இதற்கு பதிலளித்த சசிதரூர், ‘‘ஜவகர்லால் நேருவின் வாழ்க்கையை சீனாவிற்கு எதிரான பின்னடைவால் மட்டும் தீர்மானிக்க முடியாது. இந்திரா காந்தியின் வாழ்க்கையை எமர்ஜென்சியை மட்டும் கொண்டு தீர்மானிக்க முடியாது. அதே போல, அத்வானியின் நீண்ட கால சேவையை ஒரு அத்தியாயத்தை கொண்டு தீர்மானிப்பது நியாயமற்றது. அத்வானிக்கும் அதே மரியாதையை நாம் தர வேண்டும்’’ என கூறி உள்ளார்.
வழக்கம் போல், ‘இது சசிதரூரின் தனிப்பட்ட கருத்து’ என காங்கிரஸ் விலகி உள்ளது. காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பர துறை தலைவர் பவன் கேரா கூறுகையில், ‘‘சசிதரூர் எப்போதும் போல் தனக்காக பேசுகிறார். ஆனாலும் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக அவர் தொடர்ந்து செயல்படுவது கட்சியின் ஜனநாயக மற்றும் தாராளவாத உணர்வை பிரதிபலிக்கிறது’’ என கூறி உள்ளார்.

