புதுடெல்லி: ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து மகாத்மா காந்தி மீது ஒன்றிய பாஜக அரசு வெறுப்பு அரசியல் செய்வதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பெயரை மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில், விளம்பரப்படுத்துவதிலும் பாஜகவினர் வல்லுனர்கள் என்று விமர்சித்துள்ளார். நேருவை வெறுப்பது போலவே, மகாத்மா காந்தியையும் பாஜகவினர் வெறுப்பதாக குற்றம் சாட்டினார்.
அவர்கள் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தை, ஸ்வச் பாரத் அபியான் என்று பெயர் மாற்றினார்கள், கிராமப்புற எல்பிஜி விநியோகத் திட்டத்தை உஜ்வாலா என்றும் பெயர் மாற்றினார்கள். திட்டங்களின் பெயர்களை மாற்றுவதிலும், வடிவமைப்பதிலும், விளம்பரப்படுத்துவதிலும் பாஜகவினர் வல்லுனர்கள். ஜவஹர்லால் நேருவை வெறுப்பது போலவே மகாத்மா காந்தி மீதும் பாஜகவினர் வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2005 முதல் நடைமுறையில் உள்ளது. இப்போது அதன் பெயரை மாற்றுகிறார்கள். மகாத்மா காந்தி என்ற பெயரில் என்ன தவறு இருக்கிறது " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


