Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெகட்டிவ் பப்ளிசிட்டி தலைவரா செயல்படுறார்; அண்ணாமலையை சீரியஸ் பொலிட்டீசியனா மக்கள் பார்க்கல.. திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பத்மபிரியா

1 தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரும் பிரதமர் மோடியின் பிரசாரம் எடுபட்டுள்ளது என நினைக்கிறீர்களா?

தமிழ்நாட்டில் அவரது பிரசாரம் எந்த பலனையும் தரவில்லை. தோல்வி பயத்தால் தான் மோடி, அமித்ஷா போன்றவர்கள் அடிக்கடி தமிழகம் வருகிறார்கள். ரோட் ஷோ என்ற பெயரில் அவர்கள் கூத்துகளை பார்க்க மக்கள் திரளவில்லை. மக்கள் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்களின் மீது திடீரென ஏதோ பாசம், பற்று இருப்பது போன்று ஒரு மாயையை பாஜவினர் ஏற்படுத்துகின்றனர். மோடி இங்கு வரும் போதெல்லாம் திருக்குறளை மனப்பாடம் செய்து பேசுகிறார். ஆனால், அரசு திட்டங்களில் இந்திக்கு அளிக்கும் முக்கியத்துவம் தமிழுக்கு அவர்கள் கொடுக்கவில்லை. அதனால் தான் அவர்கள் பேச்சு எடுபடவில்லை. தமிழக மக்கள் அவர்களை மதிப்பதில்லை.

2 அரசியல் களத்தில் அண்ணாமலை நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

ஏதாவது ஒரு வகையில் தான் பேசும் பொருளாக இருக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. அந்த அடிப்படையில் தான் அண்ணாமலை வந்த நாட்களில் இருந்து ஒரு விஷயத்தை மட்டும் தான் பின்பற்றுகிறார், அது நெகட்டிவ் பப்ளிசிட்டி. தினமும் ஒரு பிரச்னை, எதாவது ஒரு தலைவரைப் பற்றி தவறான கருத்தை கூறுவது. இப்படித்தான் அவர் டிரென்ட் ஆகி கொண்டிருக்கிறார். இப்படி பேசும் அண்ணாமலை மக்களுக்காக ஏதாவது செய்திருக்கிறாரா என்று ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா? மக்கள் பிரச்னைகளுக்காக இதுவரை அவர் எந்த குரலும் கொடுக்கவில்லை. அதனால் அவர் மீது நல்ல பிம்பமும் இல்லை. அவரை சீரியஸ் பொலிட்டீசியனா மக்கள் பார்க்கவில்லை.

3 தேர்தல் முடிந்த உடன் அதிமுக டிடிவி.தினகரன் கைக்கு சென்று விடும் என அண்ணாமலை கூறியிருப்பது பற்றி?

தேர்தல் முடிந்தவுடன் அதிமுக, பாஜக உடன் போய் ஒட்டிக் கொள்ளும் என்று அனைவருக்குமே தெரியும். இந்த தேர்தலுக்காக மட்டுமே அவர்கள் கூட்டணியில் இருந்து பிரிந்திருக்கிறார்களே தவிர 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இணைந்து விடுவார்கள். இவர்களின் ரகசிய கூட்டணி மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பாஜக யார் கைக்கு செல்லும் என்பது தெரியாது. ஆனால், அதிமுக என்றுமே பாஜ பி டீம் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

4 ஒன்றிய பாஜ ஆட்சியால் மக்கள் அடைந்த இன்னல்களை பற்றி கேள்வி எழுப்பினால் பாஜவினர் மக்களை தாக்குவது தொடர்கிறதே?

பத்திரிகை சுதந்திரம் மற்றும் பல்வேறு சுதந்திரங்களைப் பற்றி பாஜவில் அண்ணாமலை மற்றும் பாஜவினர் வெறும் வாய் வார்த்தைகளாய் மட்டுமே சொல்கிறார்களே தவிர, அவர்களிடம் எதிர்த்து கேள்வி கேட்பதை விரும்புவதில்லை. அதையும் மீறி அண்ணாமலையிடம் நியாயமான கேள்விகளை கேட்டால் ஆதாரம் இருக்கிறதா? என கேட்டு வன்முறையை கையாளுவார். கட்சியின் தலைவரே அப்படி இருக்கும்போது தொண்டர்கள் வேறு எப்படி இருப்பார்கள். அவர்களின் கொள்கையே ஒன்று கலவரத்தை தூண்ட வேண்டும். இல்லை என்றால் கேள்வி கேட்பவர்களை தாக்க வேண்டும். இதைத்தான் பாஜவினர் செய்கின்றனர். குறிப்பாக பெண்கள் அவர்கள் முன்னால் கேள்வியே கேட்கக் கூடாது.