Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீட் தேர்வில் முறைகேடு 1563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து: 23ம் தேதி மறுதேர்வு; உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு வரும் 23ம் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். இந்த தேர்வில் இயற்பியல் மட்டுமே சற்று கடினமாக இருந்ததாகவும் மற்ற பாடங்கள் எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர். தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4ம் தேதி வௌியான நிலையில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய 60க்கும் மேற்பட்ட தேர்வர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றதும், 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது.

இதனிடையே தேர்வு முடிந்த ஓரிரு நாட்களிலேயே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை மறுத்த தேசிய தேர்வு முகமை வினாத்தாள் கசிவு தொடர்பான சமூக ஊடக பதிவுகள் அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்திருந்தது. மேலும் ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் கணக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. இருப்பினும் பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர் சாய் தீபக் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், “கடந்த மே 5ம் தேதி நடந்த நடப்பாண்டுக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக தேரவு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துள்ளது. அதேபோன்று கருணை மதிப்பெண் என்ற பெயரில் தேசிய தேர்வு முகமை ச முறைகேடாக மதிப்பெண்களை வழங்கியுள்ளது.

குறிப்பாக நீட் வினாத்தாள் கசிந்த ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் சுமார் 11 மாணவர்கள் 720 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

எனவே இத்தனை முறைகேடுகளுடன் நடந்து முடிந்த நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, புதிய அட்டவணையின் அடிப்படையில் மீண்டும் நீர் தேர்வு நடத்த வேண்டும். இதுகுறித்து தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக கலந்தாய்வு தொடங்க உள்ளதால் மனுக்களை அவசர வழக்காக கோடைக்கால விடுமுறை சிறப்பு அமர்வில் பட்டியலிட்டு விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சாய் தீபக் மற்றும் பாலாஜி, “நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேட்டால் பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அதனை தவிர்க்கும் விதமாக மே 5ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து விட்டு,புதியதாக தேர்வு நடத்த வேண்டும். நீட் தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தும் வரை, கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

தொடர்ந்து ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமை அமைப்பின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கனு அகர்வால், ‘‘மனுதாரர்களின் இதுபோன்ற நியாயமற்ற முறையிலான குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த 10, 11, 12 ஆகிய மூன்று தினங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து 1563 தேர்வர்களின் மதிப்பெண் அட்டைகளை ரத்து செய்ய குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு வரும் 23ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும். இதற்கான முடிவுகள் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து ஜூலை மாதம் மருத்துவ கலந்தாய்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும். இதில் தேர்வு எழுத விருப்பப்படும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். விருப்பப்படாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே தொடரும்” என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமைகள் அமைப்பின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. இதில் கருணை மதிப்பெண்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் எழுப்பும் மற்ற பிரச்னைகளுக்கும் தீர்வு காணவேண்டும். இருப்பினும் 1,563 மாணவர்களுக்கு வரும் 23ம் தேதி மறுதேர்வை, நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாதவாறு நடத்தி முடிக்க வேண்டும். இதில் மறுதேர்வு எழுதுவது என்பது மாணவர்களின் விருப்பமாகும். இருப்பினும் இந்த விவகாரத்தில் மனுதாரர் கூறியது போன்று ஒட்டு மொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்யவோ அல்லது கலந்தாய்வுக்கு தடை விதிக்கவோ முடியாது. அதனால் மனுதாரரின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்” என உத்தரவிட்டனர்.

* நீட் முறைகேடு விவகாரத்தில் நடந்தது என்ன?

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் ரீதியாகவும் பெரும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விவகாரத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்ன, தேசிய தேர்வு முகமை என்ன கூறுகிறது, உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது பற்றி விளக்கமாக…

* முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?

நீட் நுழைவுத்தேர்வில் 180 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண். தவறான பதில் அளித்தால் 1 மதிப்பெண் குறைக்கப்படும். அனைத்து கேள்விக்களுக்கும் சரியான பதில் அளித்தால் அதிகபட்சம் 720 மதிப்பெண் எடுக்கலாம். கடந்த 2020ல் ஒரே ஒரு மாணவன் 720 மதிப்பெண் எடுத்துள்ளார். 2021ல் 2 பேர், 2022ல் 3 பேர், கடந்த ஆண்டு 2 பேர் 100 சதவீத மதிப்பெண் எடுத்துள்ளார். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மே 5ம் தேதி தேர்வு நடப்பதற்கு முன்பாக 35க்கும் மேற்பட்டோருக்கு வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும் இந்த வினாத்தாள் கசிவு தெடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பீகார் போலீசார் கடந்த மாதம் தெரிவித்துள்ளனர். மேலும், நேர பற்றாக்குறை காரணமாக 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

* கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது ஏன்?

மேகாலயா, அரியானா, சட்டீஸ்கர், சூரத் மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் 6 தேர்வு மையங்களில் தேர்வின் போது நேர இழப்பு புகார் எழுந்தது. இதற்கு தவறான வினாத்தாள் விநியோகம், ஓஎம்ஆர் சீட்கள் கிழிந்து போயிருந்தது, ஓஎம்ஆர் சீட் தருவதில் தாமதம் போன்றவை காரணமாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு தேர்வு எழுத முழுமையாக 3 மணி நேரம் 20 நிமிடங்கள் கிடைக்கவில்லை. இந்த நேர இழப்பை ஈடுகட்ட உச்ச நீதிமன்றத்தின் 2018 தீர்ப்பின் அடிப்படையில், குறிப்பிட்ட 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடாக கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. அதாவது இழப்பு ஏற்பட்ட நேரத்தில் எத்தனை கேள்விகளுக்கு மாணவர்கள் விடை அளித்திருக்கலாம் என்பது கணக்கிட்டு அதற்கான முழு மதிப்பெண் வழங்கப்பட்டது.

* தேசிய தேர்வு முகமை அளித்த பதில் என்ன?

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தேர்வின் புனிதத்தன்மை சமரசம் செய்யப்படவில்லை என்று கூறி வருகிறது. மொத்தம் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். இயற்பியல் பாடப்பிரிவில் ஒரு கேள்விக்கு சரியான 2 விடைகள் தரப்பட்டுள்ளன. அதில் எந்த விடையை மாணவர்கள் அளித்திருந்தாலும் அதற்கு முழு மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் மூலம், 720க்கு 720 மதிப்பெண் பெற்றவர்கள் 44 பேர். நேர இழப்பு காரணமாக பெற்ற கருணை மதிப்பெண் மூலம் 100 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் 6 பேர். இதன் காரணமாகத்தான் இம்முறை வழக்கத்திற்கு மாறாக முதலிடம் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என என்டிஏ கூறுகிறது.

* கல்வி அமைச்சகத்தின் நிலைப்பாடு என்ன?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். வினாத்தாள் கசிந்ததற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை என கல்வி அமைச்சகம் கூறி உள்ளார். இதில் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் தெரிவித்துள்ளது.

* அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும் என எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன. கருணை மதிப்பெண்களை ரத்து செய்து நீட் முறைகேடு தொடர்பான பிரச்னையை ஒன்றிய அரசு மூடி மறைப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

* உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன?

முறைகேடு குற்றச்சாட்டுகள் மூலம் நீட் தேர்வில் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து 1,563 மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவர்களுக்கு வரும் 23ம் தேதி மறுதேர்வு நடத்தி வரும் 30ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.