Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீட், கியூட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க 236 வெற்றிப் பள்ளிகள் திட்டம்: ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 2025-26ம் கல்வியாண்டில் 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளை வெற்றி பள்ளிகளாக மாற்றம் செய்து தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, தேசிய சட்டப்பள்ளி, மத்திய பல்கலைக் கழகம் உள்ளிட்ட நுழைவுத் தேர்வின் மூலம் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வது குறைவாகவே இருந்தது. இதனை மாற்றும் வகையில், தமிழ்நாட்டில் ‘தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள் திட்டம்’ 2021-22ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் மாவட்டத்திற்கு 1 என 38 உண்டு உறைவிட மாவட்ட மாதிரிப் பள்ளிகள் துவங்கி நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் அகில இந்திய முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஜேஇஇ, நீட், கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் முதலாம் ஆண்டில் 75 மாணவர்களும், 2ம் ஆண்டில் 274 மாணவர்களும், 3ம் ஆண்டில் 628 மாணவர்களும் என இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் உள்ள முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். 2024-25ம் ஆண்டில் 901 மாணவர்கள் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனர். கடந்த 4 ஆண்டு காலத்தில் மாதிரிப் பள்ளிகள் மூலமாக பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், மாவட்ட உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை வட்டார அளவில் கொண்டு செல்வதற்காக ‘வெற்றி பள்ளிகள் திட்டம்’ (vibrant educational targeting Reputed institutions) உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள 414 வட்டாரங்களில் 500 ‘வெற்றி’ பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வட்டாரத்திலும், ஒரு அரசு மேல்நிலைப் பள்ளித் தேர்ந்தெடுக்கப்பட்டு தரம் உயர்த்தப்படும். அந்தப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகள் உருவாக்கப்படும். வாரந்தோறும் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெறும். முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ, நீட், கியூட், க்ளூட் ஐபிஎம்ஏடி உள்ளிட்ட நுழைவுத் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக பயிற்சித் தாள்கள், வீடியோ மூலம் பாடங்கள் மற்றும் ஆசிரியர்களின் நேரடிப் பயிற்சி வகுப்புகள் மூலம் கற்பிக்கப்பட உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பையும் தரமான உள்ளீடுகளையும் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கித் தரும்.

அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12 ம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் இணைந்து பயன் பெறலாம். இந்த வட்டார அளவிலான வெற்றிப் பள்ளிகள் மூலமாக ஏறத்தாழ 50,000 மாணவர்கள் பயன்பெறுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசு ரூ.111 கோடியே 37 லட்சம் ஒதுக்கியுள்ளது. அதில், முதற்கட்டமாக இந்த ஆண்டு 236 வட்டாரங்களில் வெற்றிப் பள்ளிகள் தொடங்குவதற்கென ரூ.54 கோடியே 73 லட்சம் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தக் கல்வி ஆண்டில் எஞ்சிய 178 வட்டாரங்களையும் சேர்த்து, மொத்தம் 500 வெற்றிப் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.