Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு ராஜஸ்தான் மாணவன் மகேஷ் குமார் முதலிடம்: தமிழக அளவில் சூரிய நாராயணன் முதலிடம், முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவர்கள்

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், ராஜஸ்தான் மாணவன் முதலிடம் பிடித்தார். தமிழக அளவில் மாணவன் சூரியநாராயணன் முதலிடம், இந்திய அளவில் முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் இடம் பிடித்தனர். அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 552 நகரங்களில் கடந்த மே 4ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு எழுத மொத்தம் 22 லட்சத்து 76,069 பேர் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 22 லட்சத்து 09,318 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

ஏனெனில், 2024ல் நீட் தேர்வெழுத 24.06 லட்சம் பேர் பதிவு செய்ததில், 23 லட்சத்து 33,297 பேர் தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் மொத்தம் 12 லட்சத்து 36,531 (55.96%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்தாண்டை விட 0.45% சதவீதம் குறைவாகும். அதேபோல், தமிழகத்தை பொறுத்தவரை இந்தாண்டு ஒரு லட்சத்து 35,715 பேர் தேர்வு எழுதியதில் 76,181 (56.13%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2024ல் ஒரு லட்சத்து 52,919 பேர் தேர்வு எழுதியதில் 89,199 (58.47%) பேர் தேர்ச்சி பெற்றனர். அந்தவகையில் தேர்ச்சி விகிதம் 2.34 சதவீதம் குறைவாகும். நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் 686 மதிப்பெண்களுடன் தேசியளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார். அதற்கடுத்த 2, 3ம் இடங்களில் உத்கர்ஷ் அவதியா (மத்தியப் பிரதேசம்), கிரிஷாங் ஜோஷி (மகாராஷ்டிரா) உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து சூரிய நாராயணன் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடமும், தேசியளவில் 27வது இடமும் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர். இதற்கிடையே, கடந்தாண்டு நீட் தேர்வில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்களை எடுத்தனர். அதனால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

ஆனால், இந்த முறை தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால் யாரும் 720க்கு 720 எடுக்கவில்லை. ராஜஸ்தான் மாணவர் 720க்கு 686 மதிப்பெண் எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது. இதுதவிர ஓபிசி -5 லட்சத்து 64,611 பேரும், எஸ்சி - ஒரு லட்சத்து 68,873 பேரும், எஸ்டி -67,234 பேரும், பொதுப்பிரிவு (யுஆர்)-3 லட்சத்து 38,728 பேரும், இடபிள்யூஎஸ் -97,085 பேரும் இடம் பிடித்துள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் 3,673 பேரும் மருத்துவம் படிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

* தமிழ்நாடு மாணவர்கள்

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு 1,40,158 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,35,715 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். அதில் 76,181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சூர்யநாராயணன் என்ற மாணவன் தேசிய அளவில் 27வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். அபினீத் நாகராஜ் இரண்டாவது இடமும், புகழேந்தி மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.