Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீட் ஊழல் மையமாக திகழும் பாஜக ஆளும் மாநிலங்கள்.. பிரதமர் மோடி உருக்குலைந்து போய்விட்டார் : ராகுல் காந்தி பாய்ச்சல்

டெல்லி : பாஜக ஆளும் மாநிலங்கள் நீட் ஊழல் மையங்களாக திகழ்கிறது. நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "நீட் வினாத்தாள் கசிவுகளை தடுப்பதில் பிரதமர் மோடியின் அரசு தோல்வி அடைந்துவிட்டது. மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழலை விட மிகப்பெரிய ஊழலாக நீட் முறைகேடு உருவெடுத்துள்ளது. அரசின் அனைத்து அமைப்புகளையும் பாஜக கைப்பற்றியதே நீட் முறைகேடு போன்ற ஊழலுக்கு காரணம். நான் இரண்டாம் கட்ட ஒற்றுமை நியாய யாத்திரை சென்றபோது வினாத்தாள் கசிவு பற்றி மாணவர்கள் என்னிடம் கூறினர். நீட் ஊழல் மையமாக பாஜக ஆளும் மாநிலங்கள் திகழ்கின்றன.

இந்திய கல்வித்துறையில் பாஜகவும் அதன் அமைப்புகளும் ஊடுருவி அதை குட்டிச்சுவராக்கி விட்டன. கல்வியை செல்லாததாக்கும் நடவடிக்கையை மோடி அரசு தற்போது செய்துள்ளது. சுதந்திரமான கல்வி முறை இல்லாமல் போனதற்கு காரணமே பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸும்தான்.சுதந்திரமான கல்வி முறையை மாற்றி ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சித்தாந்தத்தை புகுத்திவிட்டது. துணைவேந்தர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களே துணைவேந்தர்களாக

நியமிக்கப்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ். பிடியில் இருந்து கல்வி நிறுவனங்களை மீட்காதவரை மாணவர்களின் துயரங்கள் நீங்கப்போவது இல்லை. ஆர்.எஸ்.எஸ்., பாஜக பிடியில் இருந்து கல்வித்துறையை மீட்காதவரை வினாத்தாள் லீக், தேர்வு ரத்து தொடரும்.

யுஜிசி-நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது; நீட் தேர்வுக்கு என்ன நிகழப் போகிறது என்பது தெரியவில்லை. என்ன நடவடிக்கையாக இருந்தாலும் தான்தோன்றித் தனமான முறையில் மேற்கொள்ளக் கூடாது . மோடியின் கவனம் முழுக்க முழுக்க சபாநாயகர் தேர்வில்தான் உள்ளது. மாணவர்களை பொறுத்தவரை பொறுப்பற்ற முறையில் அரசு செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம். உளவியல் ரீதியில் பிரதமர் மோடி உருக்குலைந்து போய்விட்டார். வாரணாசியில் பிரதமர் மோடி கார் மீதே செருப்பு வீசப்பட்டுள்ளது. எந்தவித சமரச முறைக்கும் மோடி தயாராக இல்லை.

கடினமாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள், வினாத்தாள் முன்கூட்டியே கசிவதால் பாதிக்கப்படுகின்றனர். தேர்வு முறைகேடுகளை நாடு முழுவதற்கும் பாஜக அரசு விரிவுபடுத்தி விட்டதால் மாணவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மாணவர்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். முதலாவதாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் வேதனையில் உள்ளனர்.அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் தொடர்ந்து பணிபுரிவதற்கான வாய்ப்பை பாஜக அரசு பறித்துவிட்டது. இளைஞர்கள் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை ஒவ்வொன்றாக ஒன்றிய அரசு மூடி வருகிறது,"இவ்வாறு தெரிவித்தார்.