தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் மையம்: தேசிய தேர்வு முகமை ஓரவஞ்சனை செய்வதாக குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு ஆக.3ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதுநிலை நீட் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 25%க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானவில் தேர்வு மையங்கள் ஒதுக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னை, மதுரை, கோவையை தேர்வு செய்த பல மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியது தேசிய தேர்வு முகமையின் ஓரவஞ்சனையை காட்டுகிறது தமிழ்நாடு உறைவிடம் மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கீர்த்திவாசன் கூறுகையில்; கோவையைச் சேர்ந்த மாணவருக்கு கடப்பாவில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டிலேயே முதுநிலை நீட் தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குள்ளேயே தேர்வு மையங்களை அதிகப்படுத்தலாம் என்றும் வலியுறுத்தினார்.