Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீட் தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கோரிக்கை

சென்னை: முதுநிலை நீட் தேர்வில் மாணவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே மையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்ந்து நடைபெறுவது அம்பலமாகி வருகிறது.

நிகழாண்டு முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த ஜூன் 15 ஆம் தேதி நாடு முழுவதும் 179 நகரங்களில் இரு அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் மட்டுமே தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்ட இந்த தேர்வு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முடித்த 25,000 மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 2.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதற்கு விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொலைதூரங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்ல ரயில்களில் டிக்கெட் இல்லாததால் விமானங்களில் ரூபாய் பத்தாயிரத்திற்கும் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. விமான கட்டணம், தங்குமிடம், உணவு என தேர்வு எழுதச் செல்பவர்கள் ரூபாய் 30,000-க்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. தேர்வு எழுதுபவர்களைத் தவிர, குடும்பத்தினரும் அவர்களுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் செலவு இரு மடங்கு அதிகமாகிற நிலை ஏற்படும்.

தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கும் 500 முதல் 1000 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு மனஉளைச்சலையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிற சூழல் உருவாகியுள்ளது.

எனவே, தேர்வர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.