புதுடெல்லி: தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றான ஈட்டியெறிதல் ஆடவர் போட்டிக்கான தகுதிச் சுற்றுகளில் பங்கேற்ற, யு-18 ஆசிய சாம்பியன் ஹிமான்சு ஜாக்கர், 79.96 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்தார். 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தகுதி குறியீடான, 68.50 மீட்டரை விட, ஹிமான்சு எறிந்த தூரம் மிகவும் அதிகம். தவிர, கடந்த 2014ம் ஆண்டு, விஜயவாடாவில் நடந்த, 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 76.50 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை 11 ஆண்டுக்கு பின் தற்போது ஹிமான்சு ஜாக்கர் முறியடித்துள்ளார்.
ஊக்க மருந்தில் சிக்கிய உமர் ஷைபி சஸ்பெண்ட்; சமீபத்தில் நடந்த உலக பாரா தடகளப்போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சிம்ரன், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம், 200 மீட்டர் போட்டியில் வெள்ளி வென்றார். இந்த இரு போட்டிகளிலும், அவருக்கு துணையாக, தடகள வீரர் உமர் ஷைபி ஓடினார். டெல்லியில் கடந்த செப்.7ல் நடந்த 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற உமர் தங்கம் வென்றார். அப்போது அவரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி மீதான சோதனையில் அவர் ஊக்க மருந்து உட்கொண்டது தற்போது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, போட்டிகளில் பங்கேற்க அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. உமர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் துணையுடன் பாரா தடகளத்தில் வென்று சிம்ரன் பெற்ற பதக்கங்களும் பறிபோகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.