புதுடெல்லி: ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் உள்ள காந்த்ரா கிராமத்தில் 1997-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி நீரஜ் சோப்ரா, பிறந்தார். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ்சோப்ரா பின்னர் 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். முன்னதாக 2023-ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, டயமண்ட் லீக் தொடர்களிலும் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கங்கள் வென்று குவித்துள்ளார். மேலும் ஈட்டி எறிதலில், 90.23 மீட்டர் எறிந்து இந்திய விளையாட்டு வரலாற்றில் மைல் கல் சாதனையையும் அவர், படைத்தார்.
மேலும் நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம்தேதி, இந்திய ராணுவத்தில் நயிப் சுபேதாராக இணைந்தார். இதன் பின்னர் 2021-ம் தேதி சுபேதாராகவும், 2022-ம் ஆண்டு சுபேதார் மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, அவரது குடும்பத்தினர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒழுக்கம், அர்ப்பணிப்புமிக்கவர்
விழாவில் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், “லெப்டினன்ட் கர்னல் (கவுரவ) நீரஜ்சோப்ரா ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசிய பெருமை ஆகியவற்றின் உயர்ந்த கொள்கைகளை உள்ளடக்கியவர், விளையாட்டு சகோதரத்துவம் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள தலைமுறைகளுக்கு உத்வேகமாகச் சேவை செய்கிறார்” என்றார்.