துரைப்பாக்கம்: நீலாங்கரையில் உள்ள நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வீட்டுக்கு இன்று அதிகாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தினர். பின்னர், அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. சென்னை நீலாங்கரையில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வீடு உள்ளது.
கடந்த சில நாட்களாக கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசு துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அவை இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை ஒரு மர்ம நபர் தகவல் தெரிவித்து, தொடர்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் நீலாங்கரை போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் நடிகர் விஜய்யின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு அவரது வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனையில், அவரது வீட்டிலிருந்து எவ்வித வெடி பொருட்களும் சிக்கவில்லை. எனவே, இது வெறும் புரளி என போலீசாருக்குத் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த மர்ம நபர் யார் என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.