Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுராந்தகம் பெரிய ஏரியில் உபரிநீர் திறப்பு; நீலமங்கலம் - ஈசூர் தரைப்பாலம் நீரில் மூழ்கும் அபாயம்: உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

செய்யூர்: மதுராந்தகம் பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பவுஞ்சூர் அருகே நீலமங்கலம் - ஈசூர் இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கும் அபாய நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கைவிடுக்கின்றனர். ஆண்டுதோறும் கடும் மழைக்காலங்களில் மதுராந்தகம் பெரிய ஏரியில் இருந்து உபரி நீரானது கிளியாறு வழியாக பல்வேறு கிராமங்களை கடந்து கடலில் சென்று கலக்கிறது. இவ்வாறு கடக்கும் கிராமங்களில் சில மழைநீரால் பாலங்கள் மூழ்கி அப்பகுதி வழியே போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதில், முக்கியமாக நீலமங்கலம் - ஈசூர் இடையே உள்ள தரைப்பாலம் ஆண்டு தோறும் வெள்ளப்பெருக்கின்போது மூழ்கி விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போது இங்குள்ள தரைப்பாலம் மீண்டும் மூழ்கியதோடு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் அவ்வழியே போக்குவரத்து இயக்கப் பட்டாலும் தரைப்பாலம் தரம் இழந்து இருபுறமும் தடுப்புகளின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வரும் காலங்களில் பெரும் அசம்பாவிதம் நேரிடும் நிலை உருவாகியுள்ளது. இந்த தரைபாலத்தை உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும், என கிராமமக்கள் பல ஆண்டுகளாக அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் என பலரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மழைக்காலத்தில் கடும் நெருக்கடி நிலைகளால் பாதிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கிராம மக்கள் நலனை கருத்தில் கொண்டு இங்குள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

40 ஆண்டுகால கோரிக்கை

கிளியாற்றின் தரைப்பாலம் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. மேலும், விபத்து தடுப்பு கட்டைகளும் சேதம் அடைந்துள்ளது. பாலத்தின் மேல் பகுதியில் உள்ள சாலையும் சேதம் அடைந்துள்ளது. எனவே பழுதடைந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய உயர் மட்ட பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் 40 ஆண்டுகாலம் வலியுறுத்தி வருகின்றனர்.

உயிர்பலி

ஈசூர் நீலமங்கலம் கிளியாற்றில் உள்ள தரைப்பாலம் மழைக்காலங்களில் தண்ணீர் பாலத்தின் மேல் பகுதியில் செல்லும் போது ஆபத்தை உணராமல் ஆடு மாடுகளும் பொதுமக்களும் கடந்து செல்லும்போது தண்ணீரில் அடித்து சென்று பலியாகி உள்ளனர்.

விவசாயிகள் பாதிப்பு

நீலமங்கலம் தரைப்பாலம் மழைக் காலங்களில் தண்ணீர் முழ்கடித்து செல்லும்போது எல்லாம் விவசாயிகள் வயல்வெளிகளுக்கு தேவையான உரங்கள், விவசாய உபகரணங்கள் கொண்டு செல்ல முடியாமல் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்லும் இளைஞர்களும் இளம் பெண்களும் பல கிலோமீட்டர் சுற்றி செல்வதால் பாதிப்படைகின்றனர்.

அவல நிலை

வெள்ளப்பெருக்கின்போது சுற்றுவட்டாரத்தில் சாத்தமங்கலம், நெல்வாய், கருப்பூர், லத்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அவசிய தேவைகளுக்காக 10 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.