Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெளிவுபடுத்த வேண்டும்

இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எழுப்பியுள்ள ‘வாக்கு திருட்டு’ என்ற குற்றச்சாட்டு, தற்போது நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பி உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் முதல் பல்வேறு தேர்தல்களில் இந்த வாக்கு திருட்டு நடந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையமும், ஒன்றிய பாஜ அரசும் இணைந்து இதை செய்துள்ளது. போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6ஐ தவறாக பயன்படுத்துதல் ஆகிய 5 வழிகளில் இந்த வாக்கு திருட்டு நடந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘‘எங்களது கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தோல்விக்கான காரணம் குறித்து முழுமையாக ஆய்வு செய்தோம். இதில் போலி வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதை அறிந்துள்ளோம். உதாரணமாக கர்நாடகாவின் மத்திய பெங்களூரூ மக்களவை தொகுதியில் இந்த வகையில் 1 லட்சத்து 250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போலி மற்றும் தவறான முகவரிகள் மூலம் 40,009 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய தொகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் முகவரி போலியாக உள்ளது. வீட்டு முகவரியின் கதவு எண் பூஜ்ஜியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்பதையும் தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளார். வாக்குகளை யார் திருடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். முன்பு எங்களிடம் ஆதாரம் இல்லை. இப்போது 100 சதவீதம் ஆதாரம் இருக்கிறது. எனவே வழக்கம்போல் தேர்தல் ஆணையம் சாக்குப்போக்கு சொல்லக்கூடாது. அவர்கள் எங்களுக்கு சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும்.

இது எனது கோரிக்கை மட்டுமல்ல. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்கிறது. இதற்காக அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சமீபத்தில் முடிந்தது. கடந்த 1ம் தேதி வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தச்சூழலில் ராகுல்காந்தி தெரிவித்துள்ள ‘வாக்கு திருட்டு’ என்பது அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, மக்கள் மன்றத்திலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் ‘‘ராகுல்காந்தி சொல்வது உண்மையென்றால், தேர்தல் விதி 1960(3) (ஆ) பிரிவின் படி பிரமாணப்பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டு புகார் அளிக்க வேண்டும்’’ என்று தேர்தல் ஆணையம் அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.  இந்தியாவில் 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு முறை அமலுக்கு வந்தது. அதிலிருந்து 20 ஆண்டுகளாக இந்த முறையில் தான் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகளும், நடுநிலையாளர்களும் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

இதற்கு 100 சதவீதம் தெளிவான தீர்வு என்பது இதுவரை கிடைக்காத ஒன்றாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் ‘வாக்கு திருட்டு’ என்ற குற்றச்சாட்டு இப்போது லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஹேஷ்டேக்காகி வருகிறது. எனவே வாக்குப்பதிவு குறித்த நம்பகத்தன்மையை மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமன்றி, மக்கள் மன்றத்திற்கும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.