கன்னியாகுமரி மாவட்டம் செம்பருத்திவிளை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அருள்ராஜ் தனது ரப்பர் தோட்டத்தில் ஊடுபயிராக நேந்திரன் வாழையை சாகுபடி செய்திருக்கிறார். தனது சாகுபடி அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களைக் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் காணலாம். ``விவசாயப் பயிர்களில் லாபம் எடுக்க வேண்டும், அதே வேளையில் நஞ்சில்லா உணவுப் பொருட்களையே நாம் உற்பத்திசெய்ய வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாக கொண்டிருந்தேன். பெருஞ்சிலம்பு கரும்பாறை பகுதியில் ஞானதாஸ் என்ற விவசாயி ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை முறையில் பல பயிர்களை சாகுபடி செய்வது குறித்து அறிந்து அவரை சென்று பார்த்தேன். அவரது ஆலோசனையின் பேரில் ரசாயன உரங்களை எந்தளவு தவிர்க்க முடியுமோ அந்த அளவிற்கு தவிர்த்துவருகிறேன்.நேந்திரன் வாழையை சாகுபடி செய்த நாள் முதல்கொண்டு மண்புழு உரம், மாட்டுச் சாணம், மீன் அமிலம் ஆகியவற்றை 3 முறை கொடுத்துள்ளேன். வாழை நடவு செய்த 5வது மாதத்தில் மட்டும் தோட்டக்கலை அதிகாரிகள் ஆலோசனை பெயரில் ரசாயன உரமான காம்ப்ளக்ஸ் உரம் போட்டு தண்ணீர் பாய்ச்சினேன்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வாழைகளை தாக்கும் இலை வாடல் நோய் பாதிப்பு அதிமாக இருந்தது. நான் சாகுபடி செய்திருந்த வாழைகளும் இந்த இலைவாடல் நோயால் பாதிக்கப்பட்டது. தோட்டக்கலை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வாழையின் இலைகளை வெட்டி அகற்றிவிட வலியுறுத்தினர். ஆனால் இலைகளை வெட்ட எனக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் ரமேஷ் சில மருந்துகளை பயன்படுத்த கூறினார். அவரின் ஆலோசனைப்படி செய்தேன். அந்த நோயிலிருந்து வாழைகள் தப்பின.குமரி மாவட்டத்தில் இரு பருவமழை பெய்வது போல் காற்றும் அதிகமாக வீசும். காற்று வீசும்போது நேந்திரன் வாழைகள் முறிந்து விழுந்து விடும். காற்றிலிருந்து வாழைகளைக் காப்பாற்ற கம்புகளைக்கொண்டு வாழைகளின் உறுதியைப் பலப்படுத்த வேண்டும். இதற்காக ஒரு வாழைக்கு ஒரு கம்பு வீதம், வாழையின் அருகே கம்பை ஊன்றி சேர்த்து கட்டி விட்டேன். இதனால் அவை முறிந்து விழுவது தவிர்க்கப்படுகிறது. இதற்காக நான் ரூ.70 ஆயிரம் செலவில் கம்புகள் வாங்கியுள்ளேன். இதனைத் தவிர உரம், வேலை ஆட்கள் என இதுவரை ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் செலவு செய்துள்ளேன். தற்போது குமரி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காயை ரூ.43க்கு கொள்முதல் செய்கின்றனர். இந்த விலையில் விற்றால் நான் செலவு செய்தது போக மீதம் சுமார் ரூ.50 ஆயிரம்தான் வருவாய் கிடைக்கும். ஆனால் கிலோ ரூ.50க்கு மேல் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.இதற்கு மேல் விற்பனை செய்தால் நல்ல லாபம் எனக்கு கிடைக்கும். இந்த வருடம் அனைத்து வாழைகளிலும் அறுவடை முடிந்து, அடுத்த சீசனுக்கு வாழை சாகுபடி செய்யும்போது கம்புகள் வாங்க வேண்டிய தேவை இருக்காது. இதனால் லாபம் நமக்கு அதிகரிக்கும். நோய் மற்றும் காற்றில் இருந்து தப்பிவிட்டால், நேந்திரன் வாழையில் இருந்து நமக்கு நல்ல லாபம்தான்’’ என்றார்.
தொடர்புக்கு:
கிறிஸ்டோபர் அருள்ராஜ்:
94432 72926.
உறவினர்களுடன் பகிர்வு
ரப்பர் தோட்டத்தில் நேந்திரன் வாழை மட்டுமின்றி காய்கறிகள், மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றையும் ஊடுபயிராக பயிர் செய்யும் கிறிஸ்டோபர் அருள்ராஜ், அவற்றை தனது நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ளவற்றை விற்பனைசெய்துவிடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், `` எனது ேதாட்டத்தில் ஊடுபயிராக காய்கறிகள், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து இருந்தேன். காய்கறி செடிகளில் இருந்து கிடைத்த காய்கறிகள், மரவள்ளிக்கிழங்குகளை எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்தேன். அவர்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ள காய்கறி, கிழங்குகளை விற்பனை செய்தேன். தற்போது சிறுகிழங்கு சாகுபடி செய்துள்ளேன். இதனை உறவினர்களுக்கு மட்டும் கொடுக்க முடிவு செய்துள்ளேன். நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யப்படும் உணவுகளை நமது உறவினர்களுக்கு கொடுத்து நாமும் உண்ணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார்.
வாழைத்தார்களுக்கு பாதுகாப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேந்திரம் வாழைகளில் இருந்து குலைகள் (தார்) வந்தபிறகு தாரின் மீது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்காமல் இருக்க கவர்கள் போடுவது வழக்கம். இதனால் தார்கள் நல்ல திரட்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கும். அதன்படி கிறிஸ்டோபரும் தனது தோட்டத்திலும் அனைத்து வாழைத்தார்களையும் கவர் மூலம் மூடியுள்ளார். இந்தக் கவர்கள் அனைத்தும் தோட்டக்கலை வழங்கியவை. இவரது தோட்டத்தில் இருந்து சிறிது தூரத்திலேயே மலைகள் இருப்பதால் குரங்குகள் அவ்வப்போது தோட்டத்திற்குள் புகுந்து தொல்லை கொடுக்கும். அவற்றையும் அவ்வப்போது விரட்டி தார்களைப் பாதுகாத்து வருகிறார்.