என்டிஏ கூட்டணி வேண்டாம்: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும்; பாஜவுக்கு டிடிவி.தினகரன் புதிய நிபந்தனை; 2026க்கு பிறகு கட்சியை கைப்பற்ற பிளான் ரெடி
சென்னை: அதிமுக, பாஜ கூட்டணி ஏற்பட்ட பிறகு, தற்போது தமிழகத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைப்பது, கூட்டணியை சிதைப்பது என்று பல்வேறு அஸ்திரங்களை ஒன்றிய பாஜ அரசு ஏவும் என்று பலரும் கனவு கண்டு கொண்டிருந்தனர். அதிமுக தலைவர்களும் அப்படியே நினைத்து வந்தனர். ஆனால் பாஜவை கூட்டணியில் சேர்த்த பிறகு அதிமுகவே சிதறத் தொடங்கிவிட்டது. கூட்டணியும் சிதறி வருகிறது. பாஜவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்தவுடன், எடப்பாடி எதிர்ப்பாளர்களாக கருதப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோரை கூட்டணியில் இருந்து ஓரங்கட்டும் வேலைகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
இதனால் அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகிய 6 பேர் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. இதுகுறித்து, செங்கோட்டையன் மட்டும் வெளிப்படையாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இதனால் அதிமுக மோதலில் பாஜ நேரடியாக தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தொடர்ந்து, டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி, தொழிலதிபர் ஒருவருடன் சென்று சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை எழ தொடங்கின. அதேநேரத்தில், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அவரை தொடர்ந்து டிடிவி.தினகரனும் அறிவித்தார். பின்னர் இரு நாட்களுக்கு முன்னர் அண்ணாமலை, டிடிவி.தினகரனை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், டிடிவி.தினகரன் திடீரென்று பாஜவுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இனி என்டிஏ கூட்டணியில் நான் சேர விரும்பவில்லை. ஆனால் அதிமுகவில் சேர விரும்புகிறேன். என்னைப் போல சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் கட்சியில் சேர்க்க வேண்டும். பாஜதான், அதிமுகவை உடைத்தது. எங்களை வெளியேற்றியதும், ஓ.பன்னீர்செல்வத்தை எங்களிடம் இருந்து பிரித்ததும், பின்னர் சேர்த்ததும் பாஜதான். தற்போது பன்னீர்செல்வம் பிரிவதற்கும் காரணம் பாஜதான்.
இதனால் எங்கள் வெளியேற்றத்துக்கு காரணமான பாஜவே தற்போது எங்களை அதிமுகவில் சேர்த்து வைக்க வேண்டும் என்று புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். நாங்கள் அதிமுகவில் சேர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு காரணம், அதிமுக கூட்டணி எப்படியும் 2026ம் ஆண்டு தேர்தலில் தோற்கும். இந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடிக்கு இறங்கு முகம் ஏற்படும். தொடர் தோல்விகளை அவர் சந்திக்கிறார். இதனால் அவருக்கு பதில் டிடிவி.தினகரனை பொதுச் செயலாளராக்க வேண்டும் என்ற கோரிக்கையை தனது ஆதரவாளர்கள் மூலம் எழுப்பி கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே டிடிவி.தினகரனின் எண்ணம் என்று கூறப்படுகிறது.