Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என்சிஇஆர்டி பாடத்திட்டங்கள் மூலம் கல்வியை காவிமயமாக்கும் துரோகத்தை செய்வதா? ஒன்றிய அரசுக்கு திமுக மாணவர் அணி கண்டனம்

சென்னை: என்சிஇஆர்டி பாடத்திட்டங்கள் மூலம் கல்வியைக் காவிமயமாக்கும் துரோகத்தைச் செய்யும் மோடி அரசுக்குக்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக மாணவர் அணி செயலாளர் இரா.ராஜீவ்காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை: என்சிஇஆர்டி என்ற பெயரில் மாநிலங்களின் வரலாற்றை, இந்தி அல்லாத மொழிகளின் வரலாற்றை, சிறுபான்மையின மக்களின் வரலாற்றை திரிக்கும் வேலையை மோடி அரசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது என தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி வருகிறார்.

மீண்டும் ஒருமுறை அந்த கயமைத்தனத்தைச் செய்திருக்கிறது மோடி அரசு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதன்மையான மைசூர் போரை பற்றியும் திப்பு சுல்தான், ஹைதர் அலி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தீரர்கள் பற்றிய குறிப்புகளையும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது இந்திய மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். தொடர்ச்சியாக இந்தி அல்லாத மொழிக்கும் இந்து வைதீகம் அல்லாத மதங்களுக்கு எதிராகவும் வெறுப்பைக் கக்குவதோடு அந்த நஞ்சைக் கல்வியின் வழியில் இளந்தலைமுறையினரிடம் விதைப்பதையும் செய்துகொண்டிருக்கிறது மோடி அரசு.

இதனால்தான், பாடத்திட்டங்களை மாநில அரசுகளே தீர்மானிப்பது தான் சரி என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். என்சிஇஆர்டி பாடத்திட்டங்கள் மூலம் கல்வியைக் காவிமயமாக்கும் துரோகத்தைச் செய்யும் மோடி அரசுக்கு திமுக மாணவர் அணியின் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.