காரைக்குடி: தமிழக பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தை மதுரையில் நேற்றுமுன்தினம் துவங்கினார். இரண்டாவது நாளான நேற்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே அவர் பேசுகையில், ‘‘இந்த கூட்டத்திற்கு ஹெலிகாப்டரில் பூக்களை தூவ அனுமதி கேட்டோம். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரியை நான் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. காவல்துறைக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் நான் சொல்லி கொள்கிறேன். உங்களுக்கு எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.
ஆட்சி மாற்றம் வரும்போது, நீங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டீர்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பிரசார நேரத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு பிரசாரத்திற்கு பிரதமர் மோடி கண்டிப்பாக வருவார்’’ என்றார்.
ஆட்சி அதிகாரம் வேண்டும்: சிவகங்கை மாவட்ட பாஜ தலைவர் பாண்டித்துரை பேசுகையில், ‘‘ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் வேண்டும்’’ என்றார். இது கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.