நெல்லை: நெல்லையில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை, நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நோட்டமிட்டு புகைப்படம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் பிரபல நடிகர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.35 மணியளவில், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் வீட்டின் அருகே பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்த இருவர், அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர், நயினார் நாகேந்திரனுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, அவரது உதவியாளர்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் வீட்டை புகைப்படம் எடுப்பதும், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து நோட்டமிடுவதும் அந்த கேமராவில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இன்று காலை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அறந்தாங்கியில் நடந்த கட்சி நிகழ்ச்சிக்கு கூடுதல் பாதுகாப்புடன் சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது அவரது குடும்பத்தினரும் வெளியூர் சென்றிருந்ததால் வீட்டில் யாரும் இல்லை.
இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘`இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் புகார் எதுவும் இன்று காலை வரை அளிக்கப்பட வில்லை. கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.
