Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாயகன் திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: நாயகன் திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தவைத்துள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்புல 1987ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மறுவெளியீடு செய்யப்பட்டது. இந்நிலையில் எஸ்.ஆர்.ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.ராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரந்துள்ள வழக்கில், நாயகன் திரைப்படத்தை தனது நிறுவனம், ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தினை வெளியிடும் உரிமையை கடந்த 2023 அன்று பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை மறைத்து வி.எஸ்.பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இன்று ‘நாயகன்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாகவும். இது முறைகேடான நடவடிக்கை என தெரிவித்துள்ளார். எனவே ‘நாயகன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இன்று வசூலான தொகையை நீதிமன்றத்தில் கட்ட உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி முன்பு மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுவை நாளை (அதாவது இன்று)விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி என்.செந்தில் குமார், ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே நாயகன் படம் மறுவெளியீட்டிற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். அதே சமயம் இந்த மனுவுக்கு ஏடிஎம் புரொடக்ஷன்ஸ், வி.எஸ்.பிலிம் இண்டர்நேஷனல் உள்ளிட்ட நிறுவனம் பதில் அளிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது நாயகன் படத்தை தான் 16 முறை பார்த்துள்ளதாகவும், காட்சி வாரியாக தன்னால் இப்போது சொல்ல முடியும் என நீதிபதி செந்தில் குமார் சுவாரசியமாக குறிப்பிட்டார்.