ராஞ்சி: ஜார்க்கண்டில் ரூ.15 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சலைட் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம், கும்லா மாவட்டம், சங்கபாடி உபர் டோலி பகுதியில் நக்சலைட்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென பாதுகாப்பு படையினர் - நக்சலைட்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகு அப்பகுதியில் நக்சலைட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
இவர், பிஎல்எப்ஐ என்ற நக்சலைட் அமைப்பின் தலைவர் மற்றும் பிராந்திய கமாண்டர் மார்ட்டின் கெர்கெட்டா என அடையாளம் காணப்பட்டார். இந்த என்கவுன்டரின் போது, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும், மேலும் 2 அல்லது 3 நக்சலைட்டுகள் காயமடைந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ட்டின் மீது ஜார்க்கண்டின் 7 மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் 72 வழக்குகள் உள்ளன. அவரை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் 9 நக்சலைட்கள் நேற்று காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தனர்.