தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தளபதி உள்பட 3 பேர் சுட்டுக்கொலை: ஜார்கண்டில் பாதுகாப்புப் படை அதிரடி
ராஞ்சி: ஜார்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய தளபதி உள்பட 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 7ம் தேதி சாய்பாசா பகுதியில் மண்டலத் தளபதி அமித் ஹன்ஸ்டாவும், நேற்று முன்தினம் பலாமூ மாவட்டத்தில் ஒரு நக்சலும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஹசாரிபாக் மாவட்டம் கோர்ஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பதிபிரி வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கோப்ரா படையின் 209வது பட்டாலியன் மற்றும் மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர், தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய தளபதி சஹ்தேவ் சோரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இருவரும் ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த ரகுநாத் ஹெம்ப்ராம் மற்றும் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த பிர்சென் கன்ஜு என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.