கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை, தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும், இதனால் இங்கு அதிக பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் கேரள மாநிலத்திற்கும் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பூக்கள் வாங்குவதற்காக பல பகுதிகளில் இருந்தும், குறிப்பாக கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் தோவாளை சந்தைக்கு வருவதால், பூக்களுக்கு கடுமையான கிராக்கி ஏற்படுகிறது.
இந்த நிலையில், நவராத்திரி தொடங்கவே, தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பூக்களுக்கான தேவை அதிகரிப்பதால் விலை ஏறுவதாகவும், கேரள மாநிலத்திற்கும் இங்கிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாலும் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. அதன்படி வாடாமல்லி, கேந்தி, செவ்வந்தி, தாமரை, அரளி, தாழம்பூ என அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட அரளி பூ ரூ. 160ஆகவும் ரூ.50க்கு விற்கப்பட்ட வாடாமல்லி ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.30க்கு விற்கப்பட்ட சிவப்பு கேந்தி ரூ.60 ஆகவும் ரூ.70க்கு விற்ற சம்பங்கி ரூ.100ஆகவும் விலை உயர்ந்தது. ரூ.100க்கு விற்ற பட்டன் ரோஸ் ரூ.180க்கும் துளசி ரூ.20ல் இருந்து ரூ.30 ஆக விலை உயர்ந்தது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.400ல் இருந்து ரூ.600, மல்லிகை ரூ.500ல் இருந்து ரூ.800ஆகவும் விலை உயர்ந்தது.