நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்வதை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவ மாணவன் நாவரசு கொலை வழக்கில் சீனியர் மாணவரான ஜான் டேவிட்டுக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது, ஆனால், உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்த ஜான் டேவிட் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது மகனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ஜான் டேவிட்டின் தாய் எஸ்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு, ஜான் டேவிட்டை முன்கூட்டி விடுதலை செய்வதற்கு மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், திட்டமிட்டு கொடூரமான முறையில் மருத்துவ மாணவனை கொலை செய்துள்ளதால் ஜான் டேவிட்டை முன்கூட்டி விடுதலை செய்ய முடியாது என்று ஆளுநர் மறுப்பு தெரிவித்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்பதால் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை ெசய்வது குறித்து அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அதுவரை ஜான் டேவிட்டுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.