ஒருவர் விரும்பியதை அடைய வேண்டுமானால் அதற்காக தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் முடிவெடுக்க தயங்கினால் வெற்றியின் வெளிச்சம் தெரியாது. ஆம்! முயற்சிக்கு முன்னால் வருகின்ற தயக்கமும்,வெற்றிக்கு பின்னால் வருகின்ற மயக்கமும் நிலையான வெற்றியை கொடுக்காது. ஆகவே எந்தவித தயக்கமுமின்றி முயற்சிக்க முடிவு செய்யுங்கள்.ஒரு நாட்டில் தவறு செய்த ஒருவன் அழைத்து வரப்படுகின்றான். அரசர் அவனுக்கு தண்டனையை அறிவிக்க தயாராகின்றார். குற்றவாளிக்கு மூன்று சாய்ஸ் கொடுத்தார். முதலாவதாக நாங்கள் கொடுக்கக்கூடிய வெங்காயத்தை பச்சையாகக் கடித்து சாப்பிட வேண்டும். அல்லது 100 கசையடிகள் வாங்க வேண்டும். அல்லது 10 பவுன் தங்கத்தை அபராதமாக கட்ட வேண்டும். மூன்றில் எது வேண்டுமென்று சொல்.அதை செய்தால் போதும் என்றார் அரசர். அவன் யோசித்தான் நாம் எதற்காக பத்து சவரன் தங்கத்தை அபராதம் ஆக கட்ட வேண்டும்? ஏன் கசையடி வாங்க வேண்டும்? அந்த இரண்டையும் விட வெங்காயத்தைத் தின்று விடலாம்.அது சாப்பிடும் பொருள்தானே என்று நினைத்தான்.
சாப்பிட ஆரம்பித்தான். நான்கு ஐந்து கூட சாப்பிட்டு இருக்க மாட்டான். எரிச்சல் தாங்கவில்லை கண்களிலும் மூக்கிலும் நீர் கொட்ட ஆரம்பித்தது. ஐயா இது என்னால் முடியாத காரியம், கசையடியே கொடுத்து விடுங்கள் என்றான். உடனே கசையடி ஆரம்பித்தது, தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதுகுத் தோல் உரிந்து ரத்தம் வழிந்தது. ஐயா போதும் நிறுத்துங்கள். 10 பவுன் தங்கத்தை தந்து விடுகிறேன் என்றான்.கொடுத்தான். வெங்காயம் தின்று அவஸ்தைப்பட்டு, கசையடி வாங்கித் தோலுரிந்து, கடைசியில் பவுன்களையும் கொடுத்தான். இப்படிச் செய்ததற்கு அவன் தொடக்கத்திலேயே 10 பவுன் அபராதம் கட்டியிருக்கலாம்.ஒரு தண்டனைக்குப் பதில் அவன் மூன்று தண்டனைகளையுமே அனுபவித்து விட்டான்.
இது போன்று தான் வாழ்க்கையும் படிப்போ, வேலையோ, திருமணமோ எதைத் தேர்வு செய்தாலும் யோசிக்கிறபோது பலவற்றைப் பற்றியும் யோசியுங்கள்.ஆனால் அதில் முடிவு எடுத்த ஒன்றை உறுதியாக செய்யுங்கள்.தச்சர்களைப் பற்றிய ஒரு வாசகம் உண்டு. தச்சர்கள் பல முறை அளப்பார்கள். ஆனால் ஒருமுறைதான் அறுப்பார்கள் என்று. ஏனென்றால் அறுத்த பிறகு அளக்க முடியாது.அதனால் எதுவும் பலனில்லை. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒன்றின் மீது உறுதியோடும், நம்பிக்கையோடும் நிற்கிறார்கள். உலகத்தில் எந்த வெற்றியாளரையும் ஆராய்ந்து பார்த்தால் ஒன்று தெரியும்.அவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றின் மீது வைத்த கண்ணை எடுக்காமல் இருக்கிறார்கள். அவர்களது மொத்த ஆற்றலையும், வேகத்தையும், உழைப்பையும் தான் விரும்புகின்ற இலக்கின் மீது செலுத்துகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு வெற்றியைத் தவிர வேறு என்ன கிடைக்கும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.
ரக்சிதா ராஜூ என்ற 21 வயது பெண் பாரா அத்லெட் பிரிவில் சாதனை படைத்திருக்கிறார். ஆனால் அவருக்கோ பார்வைத் திறன் கிடையாது.கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் சிக்மங்களூர் என்ற சிறிய கிராமம் தான் இவரின் சொந்த ஊர். பார்வை மட்டும் அவருக்கு இல்லாமல் போனது. சிறுவயதிலேயே அவருடைய பெற்றோரும் இறந்துவிட்டனர். காது கேட்காத,வாய் பேச இயலாத பாட்டியிடம் தான் ரக்சிதா வளர்ந்து இருக்கிறார்.பார்வையற்றோர் பள்ளியில் படித்து வந்தார். அங்கு உடற் பயிற்சி ஆசிரியராக இருந்தவர் ரக்சிதாவை தேசிய அளவில் நடைபெறும் ஓட்ட பந்தயங்களில் கலந்து கொள்ள அழைத்துச் செல்வார். அங்கேதான் சௌமியா என்ற பெண்மணியை சந்தித்திருக்கிறார். ரக்சிதாவின் திறமையை நன்கு உணர்ந்த சௌமியா, ராகுல் பாலகிருஷ்ணா என்னும் பயிற்சியாளரிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ராகுல் அவரை பெங்களூரில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா பயிற்சி மையத்தில் சேர்த்துப் பயிற்சி எடுக்க உதவியிருக்கிறார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டில் யூத் ஏசியன் பாரா கேம்ஸ் பந்தயங்களில் கலந்து கொள்ள தேர்வான ரக்சிதாவால் போட்டியில் கலந்து கொள்ள இயலவில்லை, காரணம் பாஸ்போர்ட் பிரச்னைகள்.
மனம் தளரவில்லை ரக்சிதா. அடுத்த வருடமே ஏஷியன் பாரா கேம்ஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதித்தார் ரக்சிதா. அவர் சார்ந்த பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. கடின உழைப்புக்கு ரக்சிதா சரியான முன் உதாரணமாக திகழ்கிறார். இலட்சியத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற தாகம் ஆகியவை அவருக்கு இந்த வெற்றியைத் தந்திருக்கின்றன.அதன் பிறகு அவருக்கு தடகள வாழ்வில் ஏறு முகம் தான், அவர் பெற்ற பரிசுகளில் சில 2019 ஆம் ஆண்டு உலக பாரா அத்லெடிக்ஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் 1500 மற்றும் 800 மீட்டர் பந்தயங்களில் தங்கப்பதக்கம்.2018 ஆம் ஆண்டில் ஜகர்த்தாவில் நடைபெற்ற ஏசியன் பாரா கேம்ஸ் 1500 மீட்டர் பந்தயத்தில் தங்கப்பதக்கம். 2008 ஆம் ஆண்டில் ஹரியானாவில் நடைபெற்ற 18 வது தேசிய பாரா அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் 800 மீட்டர் மற்றும் 400 மீட்டர் பந்தயங்களில் தங்கப்பதக்கம் என தொடர்ச்சியாக பதக்கங்களை வென்று சாதித்து வரும் ரக்சிதாவை பாராட்டும் விதமாக கவின் கேர் நிறுவனம் கவின் கேர் எபிலிட்டி அவார்ட் ஃபார் மாஸ்டரி என்ற விருதை வழங்கி பாராட்டியிருக்கிறது.
இவரது சாதனையை பாராட்டி, இந்திய பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரக்சிதா ராஜு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். ஏசியன் பாரா கேம்ஸில் 1500 மீட்டர் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற பெருமைக்கு முழுத் தகுதியானவர். பல காலமாக அவர் மேற்கொண்ட கடின உழைப்புக்கும், அர்ப் பணிப்புக்கும் கிடைத்த பரிசு தான் இந்த வெற்றி! என பாராட்டி இருக்கிறார்.பார்வைத் திறன் இல்லை என்றாலும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடுமையான பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவைதான் ரக்சிதா ராஜூவுக்குப் பல வெற்றிகளைத் தந்திருக்கின்றன.அனைத்து நிலைகளிலும் கவனம் தேவை. கவனம் சிதறினால் எல்லாம் சிதறும் சூழல் உருவாகலாம். ரக்சிதாவை போல இலக்கின் மீது கவனம் செலுத்தினால், வாழ்க்கை வண்ணமயமாகும் என்பது உறுதி!