Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே இயற்கையாக அமைந்தது திமுக கூட்டணி : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 75 சதவீதம் பேர் உயர்கல்வி படிக்கின்றனர்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் மாவட்டமாக சென்று நிர்வாகிகளை சந்திக்க உள்ளேன். தமிழ்நாட்டை இளைஞர்களுக்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் திமுகவுக்குத்தான் வாக்களிப்பாளர்கள் என முதல்வர் சொல்லி இருக்கிறார்.

விரைவில், 5 லட்சம் இளைஞர்களை திமுக இளைஞர் அணியில் இணைக்க உள்ளோம். மக்களை காப்போம் என சுற்றுப்பயணம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர் முதலில் அதிமுகவை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளார். தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒரே கட்சியில் பல கோஷ்டியாக இருக்கும் ஒரே கட்சி அதிமுக. சொந்த இயக்கத்தில் பிரச்னை என்றால் ஹரித்துவார் செல்கிறேன் என சொல்லிவிட்டு, டெல்லிக்கு சென்று அடுத்த கட்சி தலைவரை அழைத்து பஞ்சாயத்து செய்யும் நிலையில் அதிமுக, பா.ஜ.வின் அடிமையாக மாறி போய் உள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் உடையும் என பேசினார் எடப்பாடி. ஆனால், அவர்கள் கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். திமுக கூட்டணி மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே அமைந்த இயற்கையான கூட்டணி. என்றைக்காவது திமுகவை போல கட்சி அலுவலகத்தில் அதிமுகவினர் கூட்டணி பேசி இருக்கிறார்களா? நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் உங்கள் கூட்டணி பேரத்தை மக்கள் கவனித்துக் கொண்டுள்ளார்கள்.

அதிமுக, பாஜ கூட்டணி வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு உள்ளிட்ட அத்தனை நாசகார திட்டங்களும் வந்துவிடும். நம் அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேருங்கள், தலைவரின் இலக்கான 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 7வது முறையாக ஆட்சி பொறுப்பேற்கவும், இரண்டாவது முறையாக தலைவர் முதலமைச்சராக பொறுப்பேற்கவும் கடுமையாக உழையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.காந்தி, திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏவுமான க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.