நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வேளாண்மை அறிவியல் இயக்கம் சார்பில் விவசாயம் சார்ந்த பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்பானது கடந்த 14.07.2025 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை (26 நாட்கள்) நடைபெறுகின்றன. இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்கான பயிற்சிகளை வேளாண்மை அறிவியல் இயக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திரூரில் உள்ள கேவிகே-வில், நர்சரி செடிகள் உருவாக்குதல் மற்றும் அதுசார்ந்த தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்கும் வகையில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதில், திருவள்ளூர் மாவட்ட இளைஞர்கள் 25 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். இந்த பயிற்சியின் தொடக்க விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. பானுமதி தலைமை தாங்கி, பயிற்சியின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவர், ` இப்பயிற்சியானது செயல்முறை விளக்கத்துடன் இங்குள்ள தொழில்நுட்ப வல்லுனர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஆகவே, இப்பயிற்சியினை நன்றாக பயன்படுத்தி அனைவரும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என வாழ்த்தி பேசினார்.
பேராசிரியை அகிலா வாழ்த்துரை வழங்கி இளைஞர்களை ஊக்கப் படுத்தினார். திருவள்ளூர் வேளாண்மை இணை இயக்குனர் பால்ராஜ், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பயிற்சியின் விதிமுறைகளை எடுத்துக் கூறினர். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் புனிதா நர்சரி தொழில் சார்ந்த பயிற்சியின் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழ்ச்செல்வி, சிவகாமி, விஜயசாந்தி, குமரேசன், பண்ணை மேலாளர் நக்கீரன் ஆகியோர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்தப் பயிற்சியானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதிஉதவியுடன் நடைபெறுவதால், இதில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு பயிற்சி முடியும் வரை நாள் ஒன்றிற்கு ரூ.250ம், பயிற்சி முடிந்து நடைபெறும் இறுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.6 ஆயிரமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.