Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உன்னுடைய எதிர்காலத்தை நீயே உருவாக்கு!

நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தி நிற்காதே! எல்லையற்ற எதிர்காலம் நம் முன்னால் விரிந்திருக்கிறது. ஒவ்வொரு சொல்லும்,செயலும், சிந்தனையும் அதற்கு தகுந்தது போல் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். உன்னுடைய தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப்போல உன் மேல் பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. உன்னுடைய நல்ல எண்ணங்களும்,செயல்களும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாக பாதுகாப்பதற்கு தயாராக இருக்கின்றன. இதை நீ எப்போதும் உன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.ஒரு நாட்டு மன்னருக்கு தீராத மனக்கவலை,அதை யாரிடம் சொல்ல முடியாமல் குழப்பத்தோடு இருந்தார். அரசரின் முகத்தை கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்பது புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்தி கேட்டால் மன்னர் தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று அச்சம். இந்நிலையில் அமைச்சருக்கு ஒரு யோசனை தோன்றியது. அரசே நீங்கள் வேட்டைக்கு போய் ரொம்ப நாளாகி விட்டதல்லவா? என்று கேட்டார். ஆமாம் என்றார் அரசர். ஆனால் இப்போது நான் வேட்டையாடச் செல்லும் மனநிலையில் இல்லையே என்றார்.மனம் சரியில்லாத போது தான் இது மாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் அரசே, அதுவும் வேட்டைக்கு போகிற வழியில் உங்களுடைய குருநாதரின் ஆசிரமத்திற்கு சென்று அவரையும் தரிசித்து விட்டுச் செல்லலாம் அல்லவா? என்றார்.

குருவை பார்ப்பதற்காகவாவது வேட்டைக்கு போகலாம் என்று முடிவெடுத்தார் மன்னர். அவரை சந்தித்தால் தன்னுடைய குழப்பத்திற்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தார்.அரசர் தனது பரிவாரங்களுடன் வேட்டைக்குச் செல்ல தயாரானார்.அவர்கள் காட்டுக்கு செல்கிற வழியில் குருநாதரின் ஆசிரமம் இருந்தது. மிகவும் ஆவலுடன் அங்கு சென்றார் மன்னர்.அமைச்சரும் மற்றவர்களும் அவரைப் பின்பற்றி கூடவே சென்றனர். குருநாதர் ஒரு ஜென் துறவி. தனது சீடரான அரசரை அன்போடு வரவேற்று உபசரித்தார். இருவரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் அரசர் தனியாக பேச விரும்புவதாகச் சொன்னார்.இதனையடுத்து அமைச்சர் உட்பட அனைவரும் வேறுபுறம் சென்றனர்.தனியாக இருந்த குருவிடம் தன் மனக்குறைகள் அனைத்தையும் கொட்டித் தீர்த்தார் மன்னர்.அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ஜென் குரு சில நிமிடங்களுக்கு பிறகு நீ புறப்படலாம் என்றார். இப்போது அரசரின் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. புதிய மலர்ச்சி தெரிந்தது. உற்சாகமாக அங்கிருந்து கிளம்பினார்.அரசர். இந்த திடீர் மாற்றம் அமைச்சருக்கு வியப்பை தந்தது.

உடனே ஜென் குருவிடம் சென்ற அமைச்சர்,எங்கள் அரசருடைய பிரச்சனையை எப்படித் தீர்த்து வைத்தீர்கள் குருவே,என்று ஆவலுடன் கேட்டார். உன் அரசர் ரொம்ப புத்திசாலி.அவரே தன் பிரச்சனையை தீர்த்துக் கொண்டார். என் யோசனை அவருக்கு தேவைப்படவில்லை என்றார் குரு. அப்படியானால் என்னதான் நடந்தது குருவே என்று அடக்க முடியாமல் கேட்டார் அமைச்சர்.அதற்கு ஜென் குரு சொன்னார்,நான் செய்ததெல்லாம் அவர் தன்னுடைய குழப்பங்களைச் சொல்ல சொல்ல பொறுமையாக காது கொடுத்து கேட்டது தான்.அவர் சாய்ந்து அழ என் தோளைக் கொடுத்தேன். அவ்வளவுதான் என்றார் ஜென் குரு. இது போன்ற நல்லுறவு தான் வேண்டும்.இது போன்ற புரிதல் தான் வேண்டும்.இது போன்ற பரிவும்,பாசவும்தான் வேண்டும். உங்களைச் சுற்றி நல்லுறவு இருந்தால் உங்களால் எதையும் சாதிக்க முடியும்.அப்படி நல்லுறவுகளை உருவாக்கியும், பலருக்கு நல்லுறவாக இருந்தும் சாதித்த ஒரு மங்கையை உங்களுக்கு அறிமுகம் செய்ய போகிறேன்.உருவ கேலி, பாலியல் வன்கொடுமை, இன பாகுபாடு போன்ற சமூக பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் 24 வயது ஐஸ்வர்யா ஷர்மா.ஐஸ்வர்யாவிற்கு ஃபேஷன் மீது ஆர்வம் அதிகம்.ஃபேஷன் சார்ந்த பல்வேறு அம்சங்களை தனது வலைப்பக்கத்தில் பதிவிடுகிறார்.தனது சமூக வலைதள பக்கத்தை சமூக அக்கறையுடன் இவர் அணுகுவதே இவரது தனித்துவம்.ஐஸ்வர்யாவின் ஆன்லைன் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் பேஷன் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாது சமூக மாற்றம் குறித்தும்,சமூக அக்கறையுடன் விவாதிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஐஸ்வர்யா பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து பதிவிட்டு வருகிறார்.உருவத்தை வைத்து கேலி செய்தல்,பாலியல் வன்கொடுமை,இன பாகுபாடு போன்ற தலைப்புகள் இதில் அடங்கும்.அதுமட்டுமின்றி ஃபேஷன் மூலம் சமூக மாற்றத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிகளால் 75,000-க்கும் மேற்பட்டோரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இவரது வெற்றிகரமான பிரச்சாரங்களில் ஒன்று #flowersnotscars. இது ஸ்டாப் ஆசிட் அட்டாக்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரச்சாரம் அறிமுகமான 72 மணி நேரங்களுக்குள்ளாகவே ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது.ஐஸ்வர்யா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்.கேம்பிரிட்ஜ் ஃபவுண்டேஷனில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன்பிறகு விவேகானந்த் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ப்ரொஃபஷனல் ஸ்டடீஸ் கல்வி நிறுவனத்தில் ஜர்னலிசம் படித்தார்.தற்போது மும்பையில் எம்பிஏ படித்துள்ளார்.

இளம் வயதிலேயே இவருக்கு ஃபேஷன் மீது ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. புதிய ட்ரெண்ட், விழாக்களுக்கான உடையலங்காரம், புதிய ஸ்டைல்களை சோதித்து பார்ப்பது என மும்முரமாக செயல்பட்டார்.அவர் அணியும் ஆடைகளின் மூலம் அவர் தெரிவிக்க விரும்புவதை வெளிப்படுத்தினார்.ஃபேஷன் என்னுடைய சிந்தனையை மேம்படுத்தியது. தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. காலம் செல்ல செல்ல இந்தத் துறை மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே போனது. இந்தத் தீவிர ஆய்வின் நோக்கம் என்ன என்கிற கேள்வியும் என்னுள் எழுந்தது. அழகாக தோன்றுவதும்இருப்பதும் மட்டுமே ஃபேஷன் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்.இந்த மனநிலையை நான் மாற்ற விரும்புகிறேன்.அப்போதுதான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஃபேஷனைப் பயன்படுத்தும் எண்ணம் தோன்றியது என்கிறார் ஐஸ்வர்யா.

கல்லூரி நாட்களில் ஆதரவற்றோர்களுக்கு உணவளிக்கும் இடங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது தன்னார்வலப் பணிகளுக்காக ஐஸ்வர்யா செல்வதுண்டு.இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஆசிட்வீச் சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் லண்டன் ஃபேஷன் வீக்கில் ரேம்ப் வாக் செய்தது குறித்து தெரிந்துகொண்டார்.உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் வன்முறைக்கு ஆளான நூற்றுக்கணக்கான பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் லட்சுமி அகர்வால் ரேம்ப் வாக் செய்தார்.அவரைக் கண்டு உந்துதல் பெற்ற ஐஸ்வர்யா சமூகத்தில் நடக்கும் கசப்பான சம்பவங்களை வெளியுலகிற்கு சுட்டிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சொந்தமாக வலைப்பக்கத்தைத் தொடங்கினார்.

ஐஸ்வர்யா அன்றைய தினம் அணியும் உடைகளை வலைப்பக்கத்தில் பதிவிடத் தொடங்கினார். மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி குறித்து சுருக்கமாக எழுதத் தொடங்கினார்.மாணவர் பள்ளியில் கிண்டல் செய்யப்படுவது, மாடல் ஒருவர் நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கப்படுவது, அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் உயர் அதிகாரியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது என ஒவ்வொருவரின் மனநிலையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.இதுவே இவற்றைப் பற்றி கலந்துரையாடத் தூண்டியது. இதையே என் வலைப்பக்கத்தில் செய்தேன், என்கிறார் ஐஸ்வர்யா.

24 வயதான ஐஸ்வர்யாவின் முதல் வலைப்பதிவு ஆசிட் வீச்சு பற்றியது. இந்தப் பதிவிற்கு முன்பு ஐஸ்வர்யா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அவர்கள் கடந்து வந்த கடினமான காலகட்டத்தைப் மக்களுக்கு தனது வலைதள பக்கத்தில் வெளிப்படுத்தினார் .பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதைக் கேட்கும்போது அவர்கள் ஒவ்வொருவரின் கடினமான சூழலையும் என்னால் உணரமுடிந்தது. அதுவே என் ஆழ்மனதில் இருப்பதை எழுதவும் வெளிப்படுத்தவும் உதவியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் அதேநேரம் சமூகத்தில் நடக்கும் தீங்குகளை எதிர்த்துப் போராடுவது குறித்த என்னுடைய கருத்தையும் தெரிவிக்கும் நோக்கத்துடன் முகத்தில் டூடுல்கள் கொண்டுள்ள என் புகைப்படத்தை பதிவிட்டேன் என்றார். அப்போதிருந்து ஏராளமானோர் தங்களது அன்றாட வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை இமெயில் மூலம் ஐஸ்வர்யாவிடம் பகிர்ந்துகொண்டனர். சமூக வலைதளங்களில் என்னைத் தரக்குறைவாக பேசுவார்கள். இதை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சிலர் என்னுடைய வலைபக்கம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது எனக் கருதுகின்றனர். ஆரம்பத்தில் இவை கவலையளித்தாலும் இதை சமாளிக்கக் கற்றுக்கொண்டேன்,” என்றார்.

கடந்த மூன்றாண்டுகளில் ஐஸ்வர்யா Gucci, American Eagle, Help Age India, Water Aid, Save Rural India, Women Development Cell போன்ற பல்வேறு ஃபேஷன் பிராண்டுகளுடன் பல்வேறு பிராஜெக்டுகளில் பணியாற்றியுள்ளார்.ஃபேஷன் தொடர்பான ஒரே மாதிரியான சிந்தனைகளை தகர்த்தெறிந்து மறுவடிவம் செய்யவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இதன் மூலம் குரலற்றவர்களுக்கு சக்தியளிக்க விரும்புகிறேன் என்கிறார் ஐஸ்வர்யா.இவரைப்போல இந்த சமூகத்தை நீங்கள் மனப்பூர்வமாக விரும்பினால்,அதே சமூகம்உங்களையும் பன்மடங்காக நேசிக்கும்.உங்களால் இந்த சமூகம் பயன் அடைந்தால்,உங்களை அந்த சமூகம் சாதனையாளராக உருவாக்கும்.எனவே சமூகத்தை நேசியுங்கள்.கண்டிப்பாக நாளை உலகம்,நிச்சயம் உங்களையும் வாழ்த்தும்.