Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாரம்பரிய நெல்... தென்னை... நாட்டு மாடு... 24 ஏக்கரில் இயற்கை விவசாயம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நடுத்தரமான நகரங்களில் ஒன்று அறந்தாங்கி. சுற்றுப்புற கிராமங்களுக்கு இதுதான் அசம்பிளி பாய்ண்ட். இங்கு பல தொழில்கள் செழிப்பாக நடப்பதைப் போலவே விவசாயமும் செழிப்புற நடந்து வருகிறது. கோயம்புத்தூரைப் போலவே எந்தத் தொழிலைச் செய்தாலும், விவசாயத்தை விட்டுவிடாமல் செய்பவர்கள் இங்கு மிகுந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கனி முகம்மது. பல தொழில்களில் இவர் வெற்றி வாகை சூடினாலும் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு என மண் சார்ந்த தொழில்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரைச் சந்திக்க அறந்தாங்கியில் இருந்து கம்மங்காட்டு சாலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள அவரது வயலுக்கு சென்றோம். நாட்டு மாடுகளுக்கென்று பிரம்மாண்ட கொட்டகைகள், வைக்கோல் போர்கள்,நாட்டுக்கோழிகளுக்கான குடில்கள், உயர்ந்த தென்னை மரங்கள் என இயற்கையான சூழலில் நம்மை வரவேற்று பேசினார்.

`` இடையாறு பக்கத்துல கள்ளியேம்பல்ங்குற கிராமம்தான் எங்களுக்கு பூர்வீகம். அப்பா அங்கதான் 8 ஏக்கர்ல விவசாயம் பார்த்தாரு. பொன்னி நெல் மட்டும்தான் விளைவிப்பாரு. நாங்களும் அவர் கூட விவசாயப் பணிகளை கவனிப்போம். எல்லா இடங்கள்லயும் ஆதி காலத்துல இயற்கை விவசாயம்தான் நடந்துச்சி. ஒருகட்டத்துல பசுமைப்புரட்சி ஆரம்பிச்சி நவீன விவசாய முறைகள் அறிமுகம் ஆச்சு. அப்போதான் ரசாயன உரங்கள் பயன்பாட்டுக்கு வர ஆரம்பிச்சது. அப்படித்தான் நாங்களும் ரசாயன உரங்களை பயன்படுத்திவிவசாயம் பார்த்தோம். அப்பாவுக்கு அப்புறம் நானே விவசாயத்துல இறங்குனேன். 15 வருசத்துக்கு முன்ன நம்மாழ்வார் முயற்சியால இயற்கை விவசாயம் பத்தின விழிப்புணர்வு பரவ ஆரம்பிச்சது. அந்த சமயத்துல நானும் இயற்கை விவசாயத்தோட மகத்துவத்தை உணர ஆரம்பிச்சேன். நாமளும் இனிமே இயற்கை விவசாயம்தான் பார்க்கணும்னு இறங்கிட்டேன். 15 வருசமாக எந்தப் பிரச்னை வந்தாலும் ரசாயன உரங்களையோ, பூச்சிக்கொல்லி மருந்துகளையோ பயன்படுத்துறதில்ல. முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான். இதனால நாங்க நல்ல உணவை சாப்பிடுறோம். மற்றவர்களுக்கு நல்ல உணவு கிடைக்க வழிவகை செய்றோம்’’ என்றவர், மேலும் தொடர்ந்தார்.

`` இப்போ இங்க 24 ஏக்கர்ல விவசாயம் பார்க்கிறோம். இதுல மூன்றரை ஏக்கர்ல தென்னை போட்டுருக்கோம். மீதி இடங்கள்ல நெல் பயிரிடுறோம். எல்லாமே பாரம்பரிய நெல்தான். ஆரம்பத்துல ஆத்தூர் கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பான்னு ஒருசில ரகங்களைத்தான் பயிரிட்டோம். அதுக்கப்புறம் சீரக சம்பா, சிவன் சம்பா, தங்க சம்பா, இலுப்பைப்பூ சம்பா, கருப்புக்கவுனின்னு பல ரகங்களை சாகுபடி செய்ய ஆரம்பிச்சிட்டோம். 24 ஏக்கர்லயும் இந்த ரகங்களை பிரிச்சி பிரிச்சி விதைப்போம். நாங்க ஆடி-ஆவணி பட்டத்துல மட்டும்தான் நெல் விதைப்போம். இந்தப் பட்டம்தான் நெல் விளைச்சலுக்கு தோதா இருக்கு. மாடுகள் போடுற கழிவுகளை வச்சி பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம்னு பல கரைசல்களை தயாரிச்சி நெல்லுக்கு தெளிப்போம். பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்த மூலிகை கரைசல்களை தயாரிச்சி தெளிப்போம். ஆத்தூர் கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற ரகங்கள்ல ஏக்கருக்கு 36 மூட்டை நெல் மகசூலாக கிடைக்கும். சீரக சம்பாவுல 24 மூட்டை கிடைக்கும். அறுவடை செய்யுற நெல் மூட்டைகளை எங்க தேவைக்கு போக விற்பனை செஞ்சிடுவோம். அதுவும் கலப்படம் இல்லாம தூய்மையான பாரம்பரிய அரிசி தயாரிக்கிற வியாபாரிங்களுக்கு விற்பனை செய்வோம்.

மூன்றரை ஏக்கர்ல 350 தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே நெட்டை குட்டை ரகங்கள். வருசத்துக்கு 6 வெட்டு கிடைக்கும். ஒரு வெட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். 6 வெட்டுக்கும் 6 லட்ச ரூபாய் கிடைக்கும். வியாபாரிகள்கிட்ட பேசி வெட்டுக்கு விட்டுடுவோம். தென்னந்தோப்பு பக்கத்துலயே மாடுகளுக்கு 2 கொட்டகை அமைச்சிருக்கோம். அதுல மாடுகளோட கழிவுகள் சரியா போய் தேங்கி நிக்கிற மாதிரி அமைச்சிருக்கோம். 25 மாடுகள் இருக்கு. எல்லாமே நாட்டு மாடுகள். இதுல 15 பசுமாடுங்க. சிந்து, கிர், தார் பார்க்கர்னு தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் இன மாடுகள். கிர் இன மாடுகள் காலையில்4 லிருந்து 5 லிட்டர் பால் கொடுக்கும். மாலையில் 3 லிட்டர் பால் கொடுக்கும். சிந்து காலையில் 4 லிட்டர் பால் கொடுக்கும். பாலை நாங்கள் வெளியில் விக்கிறது கிடையாது. எங்க தேவைக்கு பயன்படுத்திக்கிறோம்.

ஆடிப்பட்டத்தைத் தவிர மற்ற பட்டங்கள்ல விவசாயம் பண்ணலைங்கறதால மாடுகளை நிலத்தில் மேய விடுவோம். சில நேரங்கள்ல குறிப்பிட்ட இடங்கள்ல கிடை அமைச்சி மாடுகளை விடுவோம். மாடுகள் போடுற கழிவுகள் நிலத்துக்கு நல்ல உரமா மாறும். அதுவும் இதுங்க நாட்டு மாடுங்கறதால பலன் இன்னும் நல்லா இருக்கும். ரசாயனம் கலக்காம பயிரிடுற நெல்லில் இருந்து கிடைக்கிற வைக்கோலை மாடுகளுக்கு தீவனமாக கொடுக்குறோம். அறுவடை சமயத்துல மாடுகளுக்கு தேவையான வைக்கோலை சேகரிச்சி போர் அமைச்சிப்போம். வெளியில கேக்கறவங்களுக்கும் கொடுப்போம். மாடுகளுக்கு வைக்கோல் தவிர தவிடும் கொடுப்போம். அதுவும் பாரம் பரிய நெல்லுல இருந்து கிடைக்கிற தவிடுதான். இதனால் மாடுகள் நல்ல ஆரோக்கியமா இருக்கு.

தென்னை மரங்களுக்கு மாட்டுச்சாணம் கலந்த குப்பை உரத்தைப் போடுவோம். தென்னை ஓலைகளை மரங்களுக்கு இடையில போட்டு வைப்போம். அது மழைநீரையும் பாசன நீரையும் உறிஞ்சி மண்ணை ஈரப்பதமா வச்சிக்கும். இதனால மரங்களுக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும். தேங்காய்களை விற்பனை செய்றது ஒரு பக்கம் இருந்தாலும் எங்க தேவைக்கும் பயன்படுத்துவோம். ஆர்கானிக் முறையில விளையுற தேங்காய்ங்குறதால மற்றவர்களும் எங்க கிட்ட கேட்டு வாங்குவாங்க. இதுல இருந்து எண்ணெய் எடுத்தும் பயன்படுத்துறோம். நெல் சாகுபடி, தென்னை சாகுபடி, நாட்டு மாடு வளர்ப்புன்னு ஒன்னோட ஒன்னு தொடர்பு இருக்குற மாதிரி நடக்குற இந்த விவசாயத்துல பல பலன்கள் எங்களுக்கு கிடைக்குது. 5 பசுமாடு இருந்தால் போதும், எல்லா செலவையும் சமாளிக்கலாம்னு சொல்வாங்க. நாங்க இந்த பசுமாடுகளை வச்சி எங்க விவசாயத் தேவைக்கு பயன்படுத்திக்கிறோம். எதிர்காலத்துல பாரம்பரிய நெல்லுல இருந்து அரிசி உள்ளிட்ட மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிக்கலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. இன்றைய தலைமுறை பல பிரச்சினைகளை சந்திச்சிட்டு வருது. அதுல முக்கியமா ஆரோக்கிய குறைபாடு. அதுக்கு பாரம்பரிய அரிசிகள், செக்கு எண்ணெய்கள்தான் நல்ல தீர்வு. அதேபோல நல்ல பாலும், பால் பொருட்களும் தேவையா இருக்கு. அதை நாங்க ஆரோக்கியமானதா பயன்படுத்திக்கிட்டு வரோம். மற்றவங்களுக்கு கிடைக்க எங்களால சின்ன முயற்சியை பண்றோம். இதுல எங்களுக்கு சந்தோஷம்தான்’’ என பூரிப்போடு பேசுகிறார்.

தொடர்புக்கு: கனி முகம்மது - 94437 22457.

தனது அலுவலகத்தில் கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசிகளை எப்போதும் வைத்திருக்கும் கனி முகம்மது, தன்னை சந்திக்க வருபவர்களிடம் அந்த அரிசிகளின் மகத்துவம் குறித்து விளக்குகிறார். மேலும் இதை பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கிறார்.