Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நோயில்லா சமூகத்தை உருவாக்க இயற்கை விவசாயம் பெருக வேண்டும்!

காட்டுப்பாக்கம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது. நிலையத்தின் தலைவர் முருகன் வரவேற்புரையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பிரேம் சாந்தி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் சந்துரு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா கருத்தரங்கு மற்றும் கண்காட்சியைத் தொடங்கி வைத்து துவக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ``செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் அனைவரும் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இயற்கை முறை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரச் செலவைக் குறைத்து தரமான பொருட்களை உற்பத்தி செய்து அதை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்தால் குறைந்த செலவில், குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறலாம்’’ என்று கூறினார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், விரிவாக்கக்கல்வி இயக்குநர் அப்பாராவ் தலைமையுரையாற்றினார்.

ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிலையம், 10வது மண்டல இயக்குநர் ஷேக் என்.மீரா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், ``கேவிகே சார்பில் வேளாண்மை மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மதிப்புகூட்டிய பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களுக்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுவருகிறது. நவீன விவசாயம் மூலம் பல ஆண்டுகளாக ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், உரங்களை மட்டுமே நம்ப வேண்டி இருந்தது. இதனால் உற்பத்தி அதிகரித்தாலும், மண்வளம் குறைந்து சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. இன்றைய சூழலில் இயற்கை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து கேவிகே நிலையங்களிலும் இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் செயல்விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இயற்கை விவசாயத்தோடு நாட்டுமாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்தல் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, மண்வளத்தை மேம்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இயற்கை விவசாயத்தில் பண்ணையில் கிடைக்கக்கூடிய இடுபொருட்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் உற்பத்திச் செலவை குறைத்து அதிக லாபம் பெறமுடியும். பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களை மதிப்பூட்டம் செய்து விற்பனை செய்தால் இருமடங்கு வருமானம் பெற்று, சத்தான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கி நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும். மேலும் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் இயற்கை அங்கக இடுபொருட்கள், தீவன விதைகள், கரணைகள். மண்புழு உரம். அசோலா, தரமான உளுந்து விதைகள். மீன் அமிலம், தேனீப்பொட்டி, இனக்கவர்ச்சிப் பொறிகள் போன்ற இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையம் மூலம் நொதிக்கப்பட்ட இயற்கை உரங்கள், புதிய வாசனை மிகுந்த நீண்ட நெல்மணி இரகங்கள். பாரம்பரிய கருப்புக்கவுனி நெல் போன்ற செயல்விளக்கங்கள் நடைபெற்று வருகிறது. எனவே, நீங்கள் இந்த வேளாண்மை அறிவியல் நிலையத்தை பயன்படுத்தி இயற்கை விவசாய தொழில்நுட்பங்களை பெற்று அதிக மகசூல் எடுத்து வெற்றி பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

வேளாண் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் திருத்தியமைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான வேளாண் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெங்களூரு தோட்டக்கலை வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பெங்களூரு பென்னர்ஹட்டா உயிரியல் பூங்காவின் துணை வனப்பாதுகாவலர் சூர்யாசென் பங்கேற்று தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகளையும் பயன்களையும் எடுத்துரைத்தார்.

பெங்களூரு தோட்டக்கலை வாரிய அலுவலகத்தின் துணை இயக்குநர் ராஜா திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டுதல் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், பசுமைக்குடில் திட்டத்தின் கீழ் உயர் தொழில்நுட்ப சாகுபடி திட்டங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பிஜப்பூர் தோட்டக்கலை வாரியத்தின் இயக்குநர் பீம்சென் கோகெரே, கிருஷ்ணகிரி தோட்டக்கலைத் துறையின் முன்னாள் இயக்குநர் பாலா சிவப்பிரசாத், இதழாளர் விஜயகுமார் ஆகியோர் உரையாற்றினர்.நிகழ்ச்சியின்போது வெற்றி பெற்ற விவசாயிகள் தங்களது அனுபவங்களை மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக முதுநிலை தோட்டக்கலை அதிகாரி கே.எச்.சுலேச்சனா வரவேற்றார். தோட்டக்கலை வாரிய அலுவலர் முகேஷ்குமார் சாகு நன்றி தெரிவித்தார். தோட்டக்கலைத்துறை சார்ந்த அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், வேளாண் வல்லுநர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.